இரண்டு, மூன்று மாடிகளை கட்ட அனுமதியைப் பெறும் சிலர் சட்டவிரோதமாக ஐந்து, ஆறு வரை மாடிகளை நிர்மாணிப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அபராதம் அறவிடுமாறு, உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், கட்டடங்களை நிர்மாணிக்கும் அனுமதியை இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற விரும்புபவர்களுக்காக “எக்ஸ்பிரஸ் சர்விஸ்” திட்டத்தை விரைவில் வௌியிடுமாறு தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
இன்று -21- உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் பிற்போவது குறித்து யாருக்கும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனக் கூறியுள்ள அவர், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடையாது தேர்தலை நடத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அந்த நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்து அடுத்த வருட தமிழ் புத்தாண்டுக்கு முன் நிச்சயம் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.