Breaking
Mon. Dec 23rd, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் ஏறக்குறைய 10 வீதமான குடும்பங்கள் போசனை மட்டத்தினை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள் அவர்களை அந்த நிலையிலிருந்து உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தரத்தினை உயர்த்துவது தொடர்பான கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள வைத்திய அதிகாரி டாக்டர் எம்.அச்சுதன் உள்ளிட்ட பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இங்கு மேலும் உரையாற்றிய அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்துறை சார் போசனை தொடர்பான செயற்திட்டத்தின் முக்கியமான நோக்கம், இலங்கையில் உள்ள போசனை குறைவான, மன, உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் தொர்பான பிரச்சினைகளை எதிர் கொள்ளுதல் என்ற சவாலாகும்.

உலகின் அனைத்து நாடுகளிலும் மிகக்கவனமாக செயற்படுத்தப்படுகின்ற செயற்திட்டமாக இது காணப்படுகிறது. குழந்தையொன்று பிறந்தது முதல் அதனுடைய உடல் நலம் சார்ந்த அனைத்துப்பிரச்சினைகளையும் தேவைகளையும் மிகக் கவனமாக முன்னெடுக்கின்ற செயற்பாடு இருக்கின்றது.  அந்த வகையில் இலங்கையைப் பொறுத்த வரையில் இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தினையும் வழங்கி மற்றவர்களுடைய நிலைக்கு உயர்த்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்தம், பல்வேறு இயற்கை அழிவுகள் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் இந்தப் போசனை அடைவு மட்டத்தினை அடைய முடியாத நிலையில் உள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18000 குடும்பங்கள் கிட்டத்தட்ட 10 வீதமான குடும்பங்கள் போசனை மட்டத்தினை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். எனவே தான் சுகாதாரத் திணைக்களத்தினால் மாத்திரம் செயற்படுத்த முடியாத நிலையில், பல்வேறு திணைக்களங்களும் இதில் செயற்பட்டால் தான் இந்த மட்டத்தினை அடைய முடியும் என்ற வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலாவதாக அதிக மதுபாவனை , இரண்டாவதாக பாடசாலைகளிலிருந்து பிள்ளைகள் இடைவிலகுவது, இளவயது திருமணம், வீட்டு வன்முறைகள், போதை வஸ்து பாவனை, அது மட்டுமல்ல முறையற்ற ஆவணங்களளைச் சமர்ப்பித்து வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்கள் அங்கு பாதிக்கப்பட்டு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கு இந்தச் சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.  இது வழமையாக யுத்தத்திலிருந்து விடுபட்டு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற சமூகத்திலே நடைபெறுகின்ற விடயங்கள் தான்.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பிரச்சினைகளோடுதான் இந்தச் சமூகத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவேதான் இவ்வாறான பிரச்சினைகள் பாடசாலை மட்டங்களில் அறிந்த, தெரிந்த விடயங்களாக இருக்கின்றன. வெறுமனே போசாக்கினை மட்டும் பேசுவதனால் அதனை உயர்த்த முடியாது.  பாடசாலை மட்டங்களில் ஏற்படுத்தப்படுகின்ற அறிவூட்டல் பிள்ளைகளின் ஊடாக பெற்றாரிடம் பேறுகின்ற நடைமுறைகள் எதிர்காலத்தில் நம்முடைய மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தின் மேம்பாட்டுக்கு காரணமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் மட்டக்களப்பிலுள்ள பாடசாலைகளின் உயற்கல்வி ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.

By

Related Post