Breaking
Fri. Nov 15th, 2024

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்கதின் பேரின் அக்குடும்பத்தின் தலைவனை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்து வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார்.

இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான சஸ்னிகாவினதும் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழுது கொலையாளியான மருமகனான பிரசாந்தன் மாமனாரையும் தாக்கியுள்ளார்.

வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தை பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் முன்னதாக சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி ஞாயிறு காலை மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்குடும்பத்தின் தலைவன் என்பதை ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்ட பொலிஸார் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது ஞாயிற்றுக்கிழமை காலை அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு மூலகாரணமாய் அமைந்துள்ளதென்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடைசியாக கடந்த வெள்ளியன்றும் (22.07.2016) கணவன்-மனைவிக்கிடையிலான முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன்- மனைவி ஆகியோர் அழைக்கப்பட்டு வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

கொல்லப்பட்ட குழந்தை தன்னுடையதல்ல என்றும் மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் என்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்தன் குடும்பத் தகராறு பற்றிய பொலிஸ் விசாரணையின் போது மனைவியிடம் தர்க்கம் புரிந்ததாக தெரியவருகிறது.

பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

By

Related Post