சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாஜக தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தையடுத்து பாஜகவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.மேலும், தமிழக பாஜகவினரும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தபோதும் ரஜினி அமைதி காத்து வந்தார். இந்நிலையில், தற்போது தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாஜகவில் சேர்க்க டெல்லி தலைவர்கள் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.