மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை….
கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கடந்த 20 வருடங்களான இதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் நான் மாகாண சபை உறுப்பினராக எதிர்க் கட்சி வரிசையில் இருந்துகொண்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். அதிகாரம் நமது கையில் இல்லாமையினால் குருகிய வேலைத்திட்டங்களை மாத்திரமே எம்மால் முன்னெடுக்க முடிந்தது. கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் கரிசனை கொள்ளவில்லை என்பதனை அப்போதே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் குறித்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு எமது மக்களின் கல்வித் தரம் குறித்து நான் எடுத்துறைத்தேன். கொழும்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக பிரதமரும் கல்வியமைச்சரும் உறுதியளித்தனர்.
நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக பாரிய திட்டங்களை முன்னெடுப்பது குறித்த உறுதி மொழியை கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியது. இதனடிப்படையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஐ.தே.க. முன்வைத்தது. அதன் உச்ச பயனை மத்திய கொழும்பின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன். எனது கோரிக்கைகளை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சகலவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்கினர். பாராளுமன்ற கல்வி அபிவிருத்து குழுவில் அங்கம் வகிக்கும் நானும் பல்வேறு கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிந்துள்ளேன்.
மத்திய கொழும்பிலுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு கொழும்பிலுள்ள நாலந்தா, ஆனந்தா முதலான பிரபல பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படுகின்றன. அத்துடன் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு ஆளுமைமிக்க முன்னாள் முஸ்லிம் தலைமைகளின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட கொழும்பு ஸாஹரா கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதிருக்கின்றது என்கிற விடயத்தையும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில் நல்லாட்சி அரசின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டம் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனூடாக பாடசாலையொன்றுக்கு 70 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நான்கு வருடத்திற்கு ‘ஏ ‘ தர பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்திற்காக மத்திய கொழும்பிலிருந்து 2 பாடசாலைகளை நான் பிரேரித்தேன். கல்வியில் பாரியளவில் அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டிய மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயம் மற்றும் ஹேமமாலி பாலிகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் இத்திட்டத்திற்க்குள் உள்ளீர்த்தேன். இதனூடாக பிரபல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களுக்கான அனுமதி மறுக்கபடுவதனை ஈடுசெய்யலாம் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
எனினும் தற்போது இதனை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இராஜாங்க அமைச்சர் பௌஸி மற்றும் அவரது புதல்வரான மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸி ஆகியேரே இவ்வாறு செயற்படுகின்றமை எமக்கு வறுத்தமளிக்கிறது. அத்துடன் பௌஸுல் ஹமீட் தலைமையிலான செரண்டிப் எனும் அமைப்பும் உந்துதல் அளிக்கிறது. அவர்கள் இலவச அரசு வழங்கும் இலவச கல்வி வியாபாரமாக்கப் பார்க்கின்றனர்.
நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கொழும்பு கல்வி வலயத்திற்கான அபிவிருத்திக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது இவர்கள் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குமாறு கடிதம் சமர்பித்திருக்கின்றனர். இது கொழும்பு கல்வி வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாகும். இந்த செய்பாட்டினால் எமது சமூகத்திற்கு தலைக்குணிவு ஏற்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை முஸ்லிம்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள என்னால் முன்னெடுக்கும் திட்டமாக இதனை பார்க்கக் கூடாது. மாறாக இது கொழும்பு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத்திட்டமாகவே கருத வேண்டும்.
மாளிகாவத்தை கொழும்பில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பகுதியாகும். எனவே இங்கு கல்வி புரட்சியொன்று ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த 20 வருடங்களாக இராஜாங்க அமைச்சர் பௌஸி அமைச்சராக இருந்துவருகிறார். அத்துடன் நௌஸர் பௌசியும் தொடர்ச்சியக பல வருடங்களாக மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில் மத்திய கொழும்பின் கல்வி அபிவிருத்திக்கு இவர்களால் பாரிய வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியும். எனினும்அந்த காலகட்டங்களில் மத்திய கொழும்பு கல்வி வளர்ச்சிக்கு அவர்களால் எவ்வித திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், நாம் தற்போது வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது அதனை தடுப்பது என்பது மிகவும் இழிச் செயலாக கருத வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு பின்னால் இருக்கும் செரண்டிப் அமைப்பு குறித்தும் நாம் வெற்கப்பட வேண்டியிருக்கிறது.
மத்திய கொழும்பு முஸ்லிம்கள் சிறந்த அரசியல், சமூக தலைமைகளை கடந்த காலங்களில் உருவாக்கியிருக்கிறது. இதன் பயனால் முற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்த வரலாறு இருக்கிறது. கல்வியில் புரட்சி செய்து சிறந்த சமூகமொன்றை எதிர்காலத்தில் கொழும்பில் ஏற்படுத்தவேண்டும். இதன்மூலமே தலைநிமிர்ந்த முஸ்லிம் சமூகமொன்றை ஏற்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
எனவே கொழும்பின் கல்வி முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதன்மூலம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்பை சம்பாதித்துக்கொள்ளவேண்டாம். அத்துடன் முஸ்லிம்களை பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் சூழ்ச்சியில் ஈடுபடவேண்டாம்
எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.