Breaking
Mon. Nov 25th, 2024

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது.

மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பரீட்சாத்திகள் சிலர் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தி பரீட்சை முறைகேட்டில் ஈடுபடவுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சை நிலைய அதிகாரிகள் தெளிவுறுத்தப்பட்டுள்ளர்.

ஆகவே பரீட்சை முறைகேடு செய்யமுடியுமான ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்,  கைத்தொலைபேசிகள் உட்பட தொழிநுட்டப சாதனங்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லல் பரீட்சை விதிமுறைகளுக்கேற்ப குற்றச்செயலாகும்.

இதேவேளை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் குறித்த விதிமுறை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அமுலில் இருக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தக் காலப்பகுதியில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் பிரத்தியேக வகுப்புகளை நடத்தல், கருத்தரங்குகள் நடத்தல், பரீட்சை வழிகாட்டல் ஆலோசனை வழங்கல், மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகம் செய்தல், மாதிரி வினாக்கள் தொடர்பில் சுவரொட்டி, பெனர், துண்டுப்பிரசுரம் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் தெளிவூட்டல் என்பன பரீட்சை விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும். ஆகவே இவ்விதிமுறைகளை மீறி எவராவது செயற்படுவாராயின், பரீட்சை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பரீட்சை விதிமுறைகளுக்கு எதிராக எவராவது செயற்படுவாராயின் அது தொடர்பில் 1911  என்ற பரீட்சைத் திணைக்களத்தின் அவசர இலக்கத்துடன் அல்லது 119 என்ற பொலிஸ் அவசர சேவைப் பிரிவின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post