புற்றுநோயாளர்களின் சிகிச்சைகளின் பொருட்டு, இலவச மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான பிரதான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அண்மைக்காலமாக இலங்கை பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால் அநேகமான நாடுகளின் பார்வை இலங்கை மீது திரும்பியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அந்த வகையில் தற்போது இலங்கை மக்களுக்கு புற்றுநோய் குறித்த சிகிச்சைகளுக்கு மருந்துகளை இலவசமாக பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகளுக்கான செலவு பல இலட்ச ரூபாவாக காணப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார வசதியற்றவர்களால் இம்மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையினை கருத்திற்கொண்டு புற்றுநோயாளர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக வழங்கும் வகையில் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.