-சுஐப் –
இன்று அழகிய கிராமமாக காட்சி தரும் புத்தளம் தில்லையடி அல் ஜித்தா கிராமம் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட தென்னந்தோட்டமாக புல்லும் புதரும் நிறைந்து காணப்பட்டது. உட்செல்ல முடியாது ஆங்காங்கே முட்கள் நிறைந்த உடைமரங்கள் காணப்பட்டன. மழைக்கால நீர்தேங்கி ஆங்காங்கே சிறு நீர்நிலைகளும் காணப்பட்டன.
வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்த விடத்தல்தீவு, பெரியமடுவைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இக்காணியை வாங்கித் திருத்தம் செய்தனர். தமக்கான வீடுகளை இக்காணியில் அமைத்தனர். “அல் ஜித்தா” எனக் கிராமத்துக்கு பெயரிட்டனர். புத்தளம், கொழும்பு வீதியின் கிழக்கு ஓரத்தில் கிராமம் அமைந்ததாலும் புத்தளம் நகரை அண்மி அமைந்ததாலும் போக்குவரத்துக்கு மிக இலகுவான கிராமமாக இது அமைந்தது. இக்கிராமிய மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடும், விடா முயற்சியும் காட்டைத் திருத்திக் கிராமமாக்க பெரிதும் உதவின. இன்று இந்தக் கிராமம் தேவையான அபிவிருத்தியைப் பெறுவதற்கு அமைச்சர் றிசாத் அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.
இக்கிராமத்திலும், இதனை அண்டிய குடியேற்றங்களில் வாழும் மக்களினதும், பிள்ளைகளது கல்வி முன்னேற்றம் கருதி, அல் ஜித்தாவிலே அன்சாரி முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையை அமைக்க அமைச்சர் பெரிதும் உதவினார். இக்கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தூர இடம் செல்லாது, அண்மையிலேயே கல்வியைப் பெற்றுக்கொள்ள இது பெரிதும் பயன்படுகின்றது.
மேலும் கிராமப் பிள்ளைகளின் முன்கல்வி நலன் கருதி அல் ஜித்தா முன்பள்ளி என அழகிய கட்டிடம் அமைக்க அமைச்சர் றிசாத் உதவினார். இங்கே மாலைநேர வகுப்பாக சன்மார்க்கக் கல்வி போதிக்கப்படுகின்றது. இதுதவிர அரபு மதரஸாவை விசாலிக்கும் போக்குடன் விசாலமான மண்டபம் ஒன்றை அமைக்க அமைச்சர் உதவினார். அரபுக்கல்வி வளர்ச்சிக்கு மண்டபம் பயன்படுகின்றது.
மேலும் கிராமத்தை மூடும் மழைநீரை வெளியேற்ற அல் ஜித்தா பிரதான தெருவின் தெற்கு ஓரமாக வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கிராமத்தின் சிறு தெருக்கள் அனைத்தும் குன்றும்குழியுமாக இருந்தன. அமைச்சரின் முயற்சியினால் அனைத்துக்கும் கிரவல் மண் கொட்டிப்பரவப்பட்டு சில ஆணடுகளாகிவிட்டன. தற்போது அல் ஜித்தா பிரதான வீதியில் காபட் போடும் வேலைகளை அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார். இவ்வாறு அமைச்சரின் அபிவிருத்திப்பணி தொடர்கின்றது.
அல் ஜித்தா கிராமத்தின் பள்ளிவாசல் அமைப்புக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மசூரின் நிதியும் பயன்பட்டது. கிராமத்தின் நீர், மின்சார இணைப்புகளை புத்தளம் முன்னாள் நகரபிதா கே.பாயிஸ் வழங்கி வைத்தார். அத்துடன் வடமேல்மாகாண சபை உறுப்பினர் நியாஸ் பாதையின் ஒரு பகுதியை முன்னர் செப்பனிடுவதற்கு உதவியிருந்தார். இவர்களையும் கிராம மக்கள் நன்றியுடன் நினைவுகூருகின்றனர்.