Breaking
Fri. Nov 1st, 2024

-சுஐப் எம்.காசிம் –

ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த பின்னர், இந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரவித்தார்.

நேற்று மாலை (04/08/2016) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒலுவில் கடலரிப்பு அபாயம் குறித்து, துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுடன், கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஏற்கனவே அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்து, கடலரிப்பினால் ஒலுவில் மக்கள் முகம்கொடுக்கும் அபாயநிலை குறித்து தெரிவித்திருந்தார்.

துறைமுக கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை தனித்தனியே சந்தித்து, ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததன் விளைவாக, சம்பந்தப்பட்ட அவ்விரு அமைச்சர்களும் அமைச்சரவைக்குக் கூட்டுப்பத்திரம் ஒன்றை (Joined Cabinet Paper) சமர்ப்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒலுவில் கடலரிப்பைத் தற்காலிகமாக தடுப்பதற்கான   அணைக்கட்டை அமைப்பதற்குரிய மண்ணை, பிறஇடங்களிலிருந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறைமுக அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்தக் கடலரிப்புப் பிரச்சினையைத் தடுப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் நினைவூட்டிய அவர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தியுடன் அமைச்சர் றிசாத் நடத்திய சந்திப்பின் பயனாக, அணைக்கட்டுக்கான தொழில்நுட்ப உதவிகளை அந்தத் திணைக்களம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 13942657_626568534175862_1694365381_n

 

By

Related Post