உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முடிந்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் மக்களாட்சி நடைபெறத் தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும் தங்களை ஆண்ட மன்னர்கள் மீது குடிமக்கள் பற்றும் பாசமும் வைத்திருக்கின்றனர். குறிப்பாக நிர்வாக பொறுப்பில் இல்லாதபோதிலும், பிரிட்டனில் மன்னர் குடும்பத்தினர், அந்நாட்டு அரசியலிலும், மக்கள் மனங்களிலும் முக்கியத்துவம் மிகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
அதேபோல், ஜப்பான் நாட்டிலும் மன்னர் குடும்பத்தினர் மீது மக்கள் மிகுந்த மரியாதைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 82 வயதான ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, தனது அரியணையில் இருந்து விலகிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
மன்னர் குடும்பத்தில் பிறந்தாலும், மன்னர் குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்துகொண்ட அகிஹிட்டோ, பதவி விலக முடிவு செய்துள்ளதையடுத்து, அவரது மகன் பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ(56) ஜப்பானின் புதிய மன்னராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், ஜப்பான் நாட்டு சட்டங்களின்படி மன்னரின் மறைவுக்கு பின்னர்தான் பட்டத்து இளவரசர்கள் மன்னராக முடிசூட்டிக் கொள்ள முடியும்.
இந்நிலையில், ஜப்பான் நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் இந்த வீடியோவில் சுமார் பத்து நிமிடம் தனது பதவி விலகல் முடிவு பற்றியும், எஞ்சிய காலத்தை எப்படி கழிக்கப் போகிறார்? என்பது தொடர்பாகவும் வீடியோ மூலம் ஜப்பான் மக்களிடையே அகிஹிட்டோ உரையாற்றுகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டை சுனாமி தாக்கியபோது மக்களுக்கு ஆறுதல் கூற தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய மன்னர் அகிஹிட்டோ ஐந்தாண்டுகளுக்கு பிறகு நாளை மக்களிடையே உரையாற்ற இருப்பதால் அந்த ஒளிபரப்பை காண ஜப்பான் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஒருவேளை, ஜப்பான் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, தனது பதவியை இளவரசர் நாருஹிட்டோவுக்கு அளிப்பதாக அகிஹிட்டோ அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே மேலோங்கி உள்ளது.