Breaking
Tue. Dec 3rd, 2024

– இக்பால் அலி –

இனவாத ஆதிக்கம் நல்லாட்சியிலும் நிறுவனமய ப்படுத்த ப்பட்டுள்ளது என்பதற்கு ஹிரியுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்;டு மைதானப் பிரச்சினை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் பள்ளிக் கூட மாணவர்களின்  விளையாட்டு மைதானம் என்று கூட கருணை காட்ட வில்லை.  பாடசாலை மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தக் கோரி இனவாதிகள் மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தச் சிறிய கிராமத்தில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களின் கடைகளுக்கு பெரும்பான்மையினச் சசோதரர்கள் பொருட்கள் வாங்கல் செல்லக் கூடாதென தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

தற்போது 90 விகிதமான மக்கள் தங்களுடைய கடைகளுக்கு வருவதில்லை எனவும் அவ்வாறு வருபர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மையினத்தவர்களில் ஒரு சிலர் தீவிரமான இனவாதப் போக்குகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெரும்பான்மையின தனவந்தர் ஒருவரினால் கடந்த 38 வருடங்களுகு;கு முன்னர்  மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் இந்தக் காணி விளையாட்டு மைதானத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.

ஒரு ஏக்கர் ஆறு பேச்சர் அளவைக் கொண்டது இது.
கடந்த நோன்பு 15 இல் அரசியல்வாதி ஒருவரின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கப்பபெற்ற நிதியின் மூலம்  பாடசாலை மைதானத்தைச் சுற்றி வர வேலி அமைக்கின்ற வேலையை ஆரம்பித்த போதே இந்தச் சம்பவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிர்மாணிக்கப்பட்ட வேலையை  தடுத்து நிறுத்துவதற்காக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் அளவில் கலந்து கொண்டனர்.

இந்த  வேலியை முற்றாக அகற்றும்படி கோரிக்கை முன்வைத்தே  கடுமையான தர்க்கங்களில் ஈடுபட்டார்கள்.  அவர்கள் பொலிஸாருடனேயே  வருகை தந்திருந்தார்கள்.   நிர்மாணிக்கப்பட்ட வேலையை அகற்ற முடியாது என பொலிஸார்   வலியுறுத்தி கூறினர்.  எனினும்  மைதானம் தொடர்பாக  கூட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தி  ஒரு சமூகமான நிலைக்கு கொண்டு வருவோம் என்ற நிலைப்பாட்டில்  பொலிஸார் இருந்தனர்.

பொலிஸ் நிலையம் வரை சென்ற இந்த விவகாரம் இன்று பூதகரிமாகி இனவாத ஆதிக்கத்தின் கட்டமைப்புடன் தம்மை நவீன மயப்படுத்திக் கொண்டு இந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுடைய மன நிம்மதியையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறது. சுற்றிவர பெரும்பான்மையின மக்களுக்கு மத்தியில் வாழும் இந்தச் சின்னஞ் சிறிய கிராம மக்கள் தங்களுடைய நிலையை யாருடன் சொல்லி அழ என்ற நிலையில் பரிதவித்துப் போய் இருக்கின்றார்கள். 2

00 குடும்பங்கள் தான் இங்கு உள்ளன. அதுவும் துன்பப்பட்ட மக்களே  உள்ளனர். பெரியளவில் பணம்படைத்தவர்கள் இங்கு இல்லை. அன்றாடம் வாழ்க்கையை தம் கடைகளில் மேற்கொள்ளும்  வர்த்தக நடவடிக்கையின் மூலமாகத்தான் ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அரசியலின் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட இனவாதம் நல்லாட்சியிலும் கோலுன்றி நிற்பதை நம் மத்தியில்  தெட்டத்தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

இது தொடர்பாக இந்தப் பிரதேச மக்கள் , பாடசாலை நலன் விரும்பிகள், ஆசிரியர் அதிபர் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.

இவர்கள் முன்னர் ஒரு போதும்  மைதானத்தைக் கேட்பதில்லை. புதிதாக மூன்று வருடாகத் தான் இந்தப் பாடசாலை மைதானதைக் கேட்பார்கள்.  சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்காக  பாடசாலை அதிபரின் அனுமதியோடு மைதானம் வழங்கப்படும்.

இவ்வருடம் சித்திரைப் புத்தாண்டு விழா அல்லாமல் இசைக் கச்சேரி நடத்துவதற்காக மைதான அனுமதி கோரி பாடசாலை அதிபரிடம் வந்தனர். அதிபர் தன்னால் முடியாது . கல்வி வலயத்;தின் அனுமதியுடன் வந்தால் மட்டும் மைதானம் தருவேன் என அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவர்கள் கல்வி வலயத்தின் அனுமதிப்படி மாலை 6.00 மணி  வரையும் தான் இசைக் கச்சேரி நடத்தலாம் என்ற அனுமதியை மட்டும் பெற்று வந்தனர். இரவு நேரம் வழங்கப்பட வில்லை. ஆனால் இவர்கள்  இசைக் கச்சேரி இரவு வேளையில் நடத்தத்தான்  திட்டமிட்டு இருந்தார்கள்.  மைதானம் சரியாக அமையாததால் சமீபத்திலுள்ள சிங்களப் பாடசாலையின் மைதானத்தில் இந்த இசைக் கச்சேரியை அன்றைய தினம் நடத்தினர். 500 மீட்டர் தூரம் அளவில் மிகச் சமீபத்தில் சொற்ப தொகையைக் கொண்ட சிங்கள மாணவர்கள் கல்வி பயிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அவர்களுக்கென ஒரு விளையாட்டு மைதானம் புறம்பாக இருந்த போதிலும் கடந்த மூன்று வருடங்களாகத்தான் முஸ்லிம் பாடசாலைக்குரித்தான  விளையாட்டு மைதானம் அவர்களுக்கு தேவைப்பாடாக அமைந்தது.

அவர்களுடைய ஊருக்குள் மிகப் பிரமாண்டமான விளையாட்டு மைதானம் இருக்கையில் ஏன் முஸ்லிம்கள் வாழும் நடு ஊருக்குள் வந்து  கடந்த மூன்று வருடங்களாக இந்த மைதானத்தைத் தாருங்கள் எனச் சுற்றி வந்து கேட்டுக் கொண்டு இருப்பதன் காரணம் என்ன ? எல்லாம் திட்டத்தோடுதான்.
விளையாட்டு மைதானம் அனுமதி வழங்கியது எவ்வாறு எனில் பாடசாலையின் அதிபரின் அனுமதியுடன் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி மட்டும் தான் அனுமதி தரமுடியும் என கிரிஉல்ல கல்வி வலயப் பணிப்பாளர் இவர்களுக்கு அனுமதிய வழங்கியிருந்தார்.

அதற்கேற்ப அதிபரும் கல்விப் பணிமனையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டார். இவர்கள் இந்த விளையாட்டு மைதானத்தை பெயரை வைத்து விளம்பரங்களைச் செய்திருந்தார்கள்.  அனுமதி கை கூடாமையால் கடைசிக் கட்டத்தில் இவர்கள் இடத்தை மாற்றினார்கள். இது இவர்களுடைய வைராக்கியமாக இருக்கலாம். இந்த மைதானத்தின் பின்னணியைத் தேடிக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைளில் இறங்கி இது யார் கொடுத்தது. எப்படி பாடசாலைக்கு வந்தது என அவர்கள் தேடியிருக்கிறார்கள். இந்த மைதானம் பற்றி சான்றுகள் அவர்களுக்கு  எதுவும் அகப்படவில்லை.

நாங்கள் நோன்பில் வேலி அடைக்கப் போனோம்.  அவர்கள் சண்டைக்கு வந்தார்கள். 100 பேர் மட்டில் வந்தார்கள்.  அவர்கள் வரும் முன்னர் நாங்கள் வேலியை அடைத்து விட்டோம். முக்காவாசி அடைத்து விட்டோம். அவர்கள் பொலிஸாருடன் வந்து  வேலியை கலட்டப் போனார்கள். எப்படி பொதுக் காணி ஒன்றுக்கு  வேலி அடைக்க முடியும் என கேட்டு கழட்ட முற்பட்டார்கள்.  ஆனால் பொலிஸார் வேலியைக் கலட்ட விடவில்லை. அவர்களையும் எங்களையும் பொலிஸுக்கு அழைத்துச் சென்றார்கள்.

எங்களிடம் ஆதாரம் இருக்கிறது ஆனால் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. பக்கத்திலுள்ள காணிகளின் ஆதாரங்களின்படி மைதானத்திற்கு எழுதப்பட்டு இருக்கிறது என நாங்கள் பொலிஸில் தெரிவித்தோம்.

அப்போது பொலிஸார் இந்த மைதானத்தை வெளியார் யாரும் பாவிக்க முடியாது. இப்போது பாடசாலைக்கு மட்டும் தான் பாவிக்க முடியும் என்று கூறினர். இப்போது கூட பாவிப்பதாக இருந்தால் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் தான் பாவிக்க வேண்டும் எனக் கோரி அனுப்பி வைத்தார்கள். பொலிஸார்  பிரதேச செயலாளருக்கு இது தொடர்பான தீர்வு வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

சரியான முடிவு வரும் வரை யாரும் பாவிக்க முடியாது என அங்கு வருகை தந்த எல்லோhடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் இதுவரை எந்தவிதமான கருத்து மோதல்களோ முரண்பாடுகளோ, தாக்குதலோ எதுவும் இல்லை.  கண்டால் வழக்கம் போல் எல்லோரும் பேசுவது போன்று பேசிக் கொள்வதுதான்.

மைதானப் பிரச்சினையை பிரச்சினை நடைபெற்ற தினத்தன்று இரு வாலிபர்கள் மது போதையில் வந்து  வேலியை கழட்ட முற்பட்ட போது எமது இளைஞர்கள் சேர்ந்து பொலிஸில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.  ஆனால் அவர்களை ஒருநாளுடன் பொலிஸார் விடுதலை செய்து விட்டனர்.

இதற்குப் பிற்பாடு பழைய எண்ணங்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு குழு குழுவாகச் சேர்ந்து முஸ்லிம்களுடைய கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என கூறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பொது பல சேன, இராணவன பலகாய போன்ற அமைப்புக்கள் வருகை தந்து இந்தப் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தார்கள். அவர்கள் விநியோகம் செய்த துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினையை எங்கள் ஊருக்குகள் மட்டும்  முடித்துக் கொள்ள வில்லை. இந்த ஊரில் இரு பக்கமும் தான் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.  பின்னால் சுற்றிவர இருப்பவர்கள் சிங்கள் மக்கள்தான். இந்த பிரதான வீதியில் எங்கள் மக்கள் தான் கடை வைத்திருக்கிறார்கள். சில்லறைக் கடை ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் முஸ்லிம்களுடையது.

அவர்களுடைய முழு நோக்கமமாக இருந்தது வியாபாரத்தை உடைப்பதாகும். இப்போது அவர்கள் கொஞ்சக் கடைகள் திறந்து இருக்கிறார்கள். அவர்களை அந்த கடைகளுக்கு செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள். இப்போது 99 விகிதமான மக்கள் கடைகளுக்கு வருவதில்லை.   எல்லா சிங்கள மக்கள் கடைகளுகு;கு வர விருப்பம். ஆனால் இவர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்.

நாங்கள் எங்கள் பகுதியிலுள்ள அரசியல்வாதிகளிடம் சென்றோம். ஆனால் போனவர்கள் அனைவரும் கைவிட்டுவிட்டார்கள். நாங்கள் அவர்களிடம் எங்களுடைய உரிமையைத் தான் கேட்கிறோம். எங்களுக்கென்று இருப்பதைத் தான் கேட்கிறோம். இல்லாத அவர்களுடைய சொத்தைக் கேட்கவும் இல்லை. எங்களுக்குத் தர விருப்பமில்லாத ஒன்றை நாங்கள் கேட்கவும் இல்லை.

அப்படியிருந்தால் எங்களுடைய காணியைக் கொடுத்து விட்டு சும்மா இருப்போம். இது எங்களுக்னெ தந்த காணியே. 38 வருடமாக உரித்தோடு இருந்த காணியே. இது பாடசாலைக்கு எனத் தந்த காணி. அரசியல் வாதி வந்து இந்த நியாயத்தைப் பற்றி விளக்கிக் கொள்கிறார்கள் இல்லை. அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுடைய  வாக்கை மட்டும்தான்.  நாங்கள் அவர்களிடம் போனால் எல்லா அரசியல் வாதிகளை சேர்த்துக் கொண்டு செய்வோம் எனக் கூறுவதும்  இல்லையேல் சரி சமனாக விட்டுக் கொடுத்து பிரச்சினையை முடிப்போம் எனக் கூறி சமாளிக்கின்ற விடயத்திற்கே எல்லோரும் கூறுகின்றார்கள். எல்லா அரசியல்வாதிகளும் சமாதானத்திற்குப் பேசிவிட்டு கோரிக்கை ஒன்றையே முன் வைக்கின்றார்கள்.

அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நியாயம் ஒன்று இருக்குமானால் அவர்களும் கடந்த 38 வருடமாக இந்த மைதானத்தில் விளையாடி இருக்க வேண்டும். இப்ப மூன்று வருடங்களாகத் தான் இந்த மைதானம் இவர்களுக்கு கண்ணுக்கு குத்தியது. இது முஸ்லிம் பாடசாலையுடைய மைதானம்  என்று அரசியல்வாதிகள்  எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எங்கள் ஊருக்கு அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடம் போய் இந்த விளையாட்டு மைதானம் யாருடையது என என்று தன்னுடைய மனட்சாட்சியை வைத்துக் கூறி எனக் கேட்ட போது உண்மையிலே இது பாடசாலைக்குரிய மைதானம் தான் என்று ஒப்புக் கொண்டார்.

அப்போது இதற்கப்பால் என்ன இருக்கு. அரசியல்வாதி நினைத்தால் இந்தப் பிரச்சினைத் தீர்க்க முடியும். இந்த மைதானத்தை பாடசாலைக்கு உரித்துடையதாக்குவது சம்மந்தமாக ஏழு கட்டம் வரை நகர்ந்து  விட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இனவாதம் எனக் காரணம் காட்டி விட்டு அரசியல்வாதிகள் தப்பிக்கப் பார்க்கின்றார்கள். நாங்கள் அவர்களுடன் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் பேசாமலும் இல்லை. கண்ட இடத்தில் நாங்கள் பேசிக்கொள்கிறோம்.  நாங்கள் நேசத்துடன் போய் கதைத்தால் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் அவர்கள் மறு பக்கத்தில் எதிராக செயற்படுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை இந்தளவுக்குப் போவதற்கு முக்கிய காரணம் நடுநிலையான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அமையவில்லை. முன்னர் இருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இருந்திருந்தால் இந்தளவுக்கு போய் இருக்காது. முஸ்லிம் கடைகளுக்கு யாரும் போக வேண்டாம் என்று சொல்ல எவரும் முன்வந்திக்க மாட்டார்கள்.  நல்லாட்சியை வைத்துக் கொண்டு அநியாயம் நடக்கிறது.

அதிபர்  எம். எஸ் சுஹைப் கருத்துத் தெரிவிக்கையில்

எமது இந்த முஸ்லிம் கிராமம்  பழைமைவாய்ந்த ஒரு கிராமம் . இந்த கிராமத்தில் இருந்த முஸ்லிம்கள் சிங்கள மக்களோடு சமூகமான நிலையில் வாழ்ந்த காரணத்தினால் வேத்தேவ கிராம சேகவர் பிரிவில் அமைந்துள்ள சிங்கள தமிழ் மொழி மூலமான பாடசாலையிலே முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்து கல்வி கற்க வைத்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே வேத்தேவ பாடசாலை தனிச் சிங்களப் பாடசாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களுக்கு தனியானதொரு கல்விக் கூடம் தேவை என்ற வகையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள்  வேறு காணிகள் இல்லாத காரணமாக பள்ளிவாசலுக்குச் சொந்தமாகப் பயனபடுத்திக் கொண்டிருந்த முஸ்லிம் மையவாடியிலேயே இந்தப் பாடசாலையை அமைத்து இருக்கிறார்கள்.
இந்தப் பாடசாலை தனியாக 1962-7- 15 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாடசாலை ஆரம்ப விழாவுக்கு கல்வி அதிகாரிககள், அரசியல்வாதிகள் எல்லோரும் வருகை தந்து உத்தியோகபூர்வமாக திறந்து அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். பௌதீக வளங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பாடசாலையின் கல்வி சம்மந்தமாக மூன்று கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான விடுதி. மார்க்க விழுமியங்களுக்காக பள்ளிவாசலும் இங்கு அமைந்துள்ளன. சுமார் 80 பேச்சர் அளவிலேதான் காணி தற்போது இருக்கிறது.  வேறு எந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கான வசதிகளோ தற்போது இல்லை. க. பொ. த. சாதாரண வரம் வரை தயார்படுத்தக் கூடிய பாடசாலை. இந்தப் பாடசாலையில் விஞ்ஞான அறையோ அல்லது விஞ்ஞான ஆய்வு கூடமோ இல்லை.

கணனி அறை இல்லை. மாணவர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய ஆங்கில வகுப்பறை, கணித வகுப்பறை இப்படியான அறைகள் கூட இல்லை . அதற்கான இடவசதியும் இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் 1978 காலப் பகுதியில்  ஒரு வேத்தேவப் பிரதேசத்திலுள்ள தனவந்தரினால் பாடசாலைக்கு முன்னால் அதாவது பிரதான பாதையை ஊடறுத்து பாடசாலையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில்  ஒரு ஏக்கர் காணி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.  அதில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் பாடசாலையின் ஏனைய கட்டங்களை அமைப்பதற்கும் வழங்கி வைக்கப்பட்டன. இந்தக் காணியை கல்வி அமைச்சு சுவீகரித்து இந்தக் காணியை வழங்குவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான சகல ஆணவங்களும் என்னிடம் இருக்கிறது.

அதே போல் 1979 காலப் பகுதியிலே இந்தக் காணி அளக்கப்பட்டு கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வழங்கப்பட்ட காணியைத் தான் பாடசாலையின் ஏனைய பௌதீக வளப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும்  20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து வருகின்றார்கள். கடந்த வருடம் 24 மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். எதிர் வருடம் 24 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.. தற்போதைய விளையாட்டு மைதானமாகக் பயன்படுத்தக் கூடிய காணியில் தான் தேவையை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கிறது. வேறு அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தக் காணிகளும் பாடசாலைக்கு அண்மித்த பிரதேசங்களில் இல்லை. கையகப் படுத்துவதற்கு எனப் பார்த்தாலும் பாடசாலைக்கு அண்மையில் இல்லை.  வழங்கப்பட்ட இந்த ஒரு ஏக்கர் காணியைத் தான் முழுமையாகப் பயன்பாட்டிலே நாங்கள் இருந்து கொண்டு இருக்கிறோம். இதனை தற்போதைய வலுவாக்கல் அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகளுக்கான அமைச்சர்  காமினி ஜயவிக்கிரம பெரேரா 1979 காலப் பகுதியில்  எமது வடமேல் மாகாணத்தில் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் அன்று இருந்த அதிபர் மற்றும் பெற்றோர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்ட அந்தக் காணியை விளையாட்டு மைதானமாக ஆக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க  விளையாட்டு மைதானம் ஆக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னால் மைதானத்திற்கு வேலி அடிப்பதற்கு பன்னவப் பிரதேச சபையினால் நிதி ஒதுக்கப்பட்டு  பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த வேலியை அடித்திருக்கிறார்கள். காலப் போக்கில் அந்த வேலிகள் கவனிப்பாரற்று இருந்த சூழ் நிலையில் 2014 ஆம் ஆண்டு நான் பாடசாலைக்கு அதிபராக வந்த சமயம் அந்த சந்தர்ப்பத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் எனக்கு அறிவித்தல் தரப்பட்டது. அதில் பாடசாலை மைதானத்தை செப்பனிட்டு  வேலி அடிக்கப்பட வேண்டும்  என்ற அடிப்படையிலே  கூறியிருந்;தார்கள்.

அது சம்மந்தமாக முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கின்ற நேரத்திலே இந்த மைதானம் முழுமையாக பாடசாலைக்கு கையகப்படுத்தப்பட வில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பெற வேண்டுமானால் மைதானத்தின் கையகப்படுத்தலை முழுமையாக நிறைசெய்து விட்டுப் நிதியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

இது சம்மந்தமாக வலயக் கல்விப் பணிப்பாளர்.  மாகாண கல்விப் பணிப்பாளர், கல்விச் செயலாளர் ஆகியோருக்கு இந்த மைதானக் காணியை கையகப்படுத்தித் தருமாறும் இது தொடர்பாக முன்னெடுத்து இறுதி நடடிக்கைகளை நிறைவு செய்து தருமாறு ஆவணங்கள் அத்தனையும் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். அவர்கள் இது சம்மந்தமாக முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறர்கள். இது விரைவாக செய்து தருவார்கள் எனில் எமது மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு  பெரிய வெற்றி கிடைக்கும் என நான் கருதுகிறேன்  என்று அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர் மாணவிகள் கருதுத் தெரிவிக்கையில் எங்களுக்கு விளையாடுவதற்கென இருப்பது ஒரே ஒரு சொத்து இந்த விளையாட்டு மைதானம். இங்கு மாடுகள் கட்டுகின்றார்கள். காடு வளர்ந்து போய் இருக்கிறது. உரிய முறையில் செப்பனிட்டுத் தாருங்கள் எனக் கோரிக்கையை முன் வைக்கின்றார்கள்.

இந்தப் பிரதேச மக்கள் இவ்வாறு ஒரு போதும் இல்லாதவாறு அவசர அவசியமாக கதைக்கவும் கோரிக்களை விடுக்கவும் வேண்டிய நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்கள்.  விளையாட்டு மைதானத்தின் பெரும்   சுமையை தாங்கிக் கொண்டு  கதைக்க முற்பட்டுள்ளார்கள்.

38 வருடங்கள் அத்தாட்சிகளுடன் உள்ள பாடசாலை மைதானத்திற்கு உரித்தான காணியை ஏன் என்ன நியாயத்துடன் பொது மைதானமாக மாற்றம் வேண்டும் முன்நிற்கிறார்கள் ?   இந்த மக்களுக்காக நியாயம் பேச யாருமே இல்லையா?  நியாயமற்ற முறையில் நடக்கும் அரசியல்வாதிகளுக்கு நாமும் தொடர்ந்து ஆதரளிப்பதா ? என்பது பற்றி நாமே இக்கேள்விகளை எங்களை நோக்கி கேட்டுக் கொள்வது நலம். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குப் புரியும்.

By

Related Post