நெற்றி வியர்வை சிந்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்காக அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் நேற்று (11) முற்பகல் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வறுமை மற்றும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அவர்களது பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் ஊடாக விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
ரஜரட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இன்று மொராஹாகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, புதிய திட்டமிடல் மற்றும் வேலைத்திட்டத்தினூடாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி விவசாயப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டளவில் தேசிய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதற்காக நான்காண்டு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகொள்வதற்காக மகாவலி விவசாயிகளை ஊக்குவித்தல், நச்சுத்தன்மையற்ற தரமான உற்பத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக விவசாயிகள் மத்தியில் மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மகாவலி அதிகார சபையினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்காக விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த விவசாயியாக மகாவலி ஹூறுலுவெவ வலயத்தைச் சேர்ந்த கல்கிரியாகம பிரிவில் வசிக்கும் திரு.ஆர்.சி. பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார். விவசாய அமைப்புக்களுள் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், மொரஹாகந்த வலயத்தைச் சேர்ந்த பக்கமூன பிரிவின் இலக்கம் 504 பெதும் எல விவசாய அமைப்பு சிறந்த விவசாய அமைப்பாக முதலாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டது.
சிறந்த விவசாய அமைப்பிற்கான முதலாம் இடத்திற்காக 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய அறுவடை இயந்திரமும் இரண்டாம் இடத்திற்கு 04 சக்கர உழவு இயந்திரமும் மூன்றாம் இடத்திற்காக 02 சக்கர உழவு வண்டியும் 04 ஆம் இடத்திலிருந்து 09 ஆம் இடம் வரை வெற்றியாளர்களுக்கு தலா 50,000 ருபா பரிசில்களும் வழங்கப்பட்டன.
அவ்வாறே சிறந்த விவசாயியாக முதலாம் இடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட விவசாயிக்கு 04 சக்கர உழவு இயந்திரமும் இரண்டாம் இடத்திற்காக சகல வசதிகளையும் கொண்ட 02 சக்கர உழவு இயந்திரமும் மூன்றாம் இடத்திற்கு 02 சக்கர உழவு இயந்திரமும் 04 ஆம் இடத்திலிருந்து 09 ஆம் இடம் வரை வெற்றியாளர்களுக்கு தலா 50,00 வீதமும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர் அநுராத ஜயரட்ன ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர திசாநாயக்க உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.