Breaking
Mon. Nov 25th, 2024

பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டதாக உள்ளது.

1990 ஆம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட 90,000 வடபுல முஸ்லீம் அகதிகள் ஒருபுறம் இருக்க 2009 இல் இடம் பெயர்ந்த புதிய தமிழ் அகதிகள் 300,000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து மனிக்பாமில் இருந்தவர்களை மீள் குடியேற்றம் செய்தவர் ரிஷாட் பதியுதீன் என்பதை சார்ள்சுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதற்கு சார்ள்ஸ் அமைச்சர் ரிஷாதுக்கு பூமாலையிட்டு நன்றி சொல்ல வேண்டுமே ஒழிய காழ்ப்புணர்ச்சியுடன் தூபம் போடுவது தமிழ் முஸ்லீம் ஐக்கியத்துக்கே வேட்டு வைப்பதாகும்.

கடந்த பொதுத் தேர்தலில் அவர் 3 இலட்சம் முஸ்லீம் வாக்குகளைப் பெற்று வளர்ந்து வரும் முஸ்லீம் தலைவர் என்பதையும் மறந்து விடக்கூடாது. ரிஷாட் பதியுதீனை சார்ள்ஸூக்கு நம்பிக்கையில்லை என்றாலும் , இலங்கையின் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நம்பிக்கையுள்ளதால் தான் அவர் செயலணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் புலிகளால் அகதிகளாக்கப்பட்டு அதே அகதி மக்களால் தெரிவு செய்யப்பட்டு அமைச்சராகி மீள் குடியேற்ற செயலணியில் இடம் பெற்றதால் , பாசிஸப் புலிகளால் விரட்டப்பட்ட வடபுல முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் பூர்வீக நிலங்களில் குடியேற்றூர் என்ற பயமா?

வடபுலத்தில் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்துக்கு இடையூறு விளைவிக்கும் சார்ள்ஸ் போன்றவர்கள் வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லீம்களின் ஆதரவை எப்படிப் பெறலாம் என்பதற்கு அவர்களே விடை தேடிக் கொள்ள வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.

தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் சமமாக மதித்து அத்தோடு சிங்கள மக்களையும் ஆதரித்து செயல்படும் முஸ்லீம் மக்களின் நெஞ்சங்களில் சங்க நாதமாக முழங்கிக் கொண்டிருக்கும் காலஞ் சென்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் வழிநடக்கும் துணிவுமிக்க இளம் தலைவர் ரிஷாதுக்கு எதிராக பொய்யான விபரீத குற்றச்சாட்டுக்கள் தொடருமாயின் அது விபரீத விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறி வைக்க விரும்புகிறோம்.
எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

By

Related Post