-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –
பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து வருகிறோம். எங்களுடைய ஆதரவு தொடரும். “காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைக்கும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்’ காஷ்மீர் மக்களின் தியாகம் வீண்போகாது,” என்று கூறிஉள்ளார்.
இருநாட்டு உறவு ஏற்கனவே மோசமாகிஉள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் தூதர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். சுதந்திர தினவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து உரையாற்றிய மம்முன் ஹுசைன், சுதந்திர தினநாளில் மக்கள் காஷ்மீர் விவகாரத்தை மறந்துவிடக்கூடாது என்றார். ”பாகிஸ்தான் காஷ்மீரிகளை மறக்க முடியாது, பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை காஷ்மீரில் செயல்படுத்த,” என்றார். பயங்கரவாதிகள் எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தானின் சுதந்திர தினவிழா பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப், மற்றும் மாகாண முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் அனைத்தும் முக்கிய நகரங்களில் இன்று தடைசெய்யப்பட்டது.