தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடிதத்தில் மேலும்..
அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியாத உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்கின்றனர்.
இவ்வாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் ரூபா கடனுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவையில் இவர்கள் இணைந்து கொண்டால் கடனுதவியை ரத்து செய்யவும் ஏனைய துறைகளில் பணிக்குச் சென்றால் கடன் தொகையை மீள அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தரத்தில் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த திட்டத்தை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்த உள்ளது.
எனினும், இந்த திட்டமானது இலவச கல்வி முறைமையை அழித்து தனியார் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.