சுஐப் எம்.காசிம்
பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கொழும்பு, பத்தரமுல்லையில் இன்று மாலை (18/08/2016) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
கல்வி அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், கஹடகஹ கிரபைட் நிறுவனத்தின் தலைவருமான முன்னாள் எம்.பி. மஜீத் (எஸ்.எஸ்.பி), சட்டத்தரணி முனாஸ்தீன், உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மன்சூர், சித்தீக் மாஸ்டர் உட்பட பொத்துவில் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகநல அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை புள்ளி விபரங்கள், ஆவணங்கள் மற்றும் அமைவிட வரைபடங்கள் மூலமாக அமைச்சர் றிசாத் எடுத்து விளக்கியபோது, பொத்துவில் மக்களின் கோரிக்கை நியாயமானது என அமைச்சர் அகிலவிராஜ் அங்கு தெரிவித்தார்.
தனியான கல்வி நிலையம் இல்லாததால் பொத்துவில் பிரதேசத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் காலாகாலமாக எதிர்நோக்கும் கஷ்டங்களை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், இந்த மக்களின் நீண்டகாலக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல், இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தில் நாட்டிலுள்ள 98 கல்வி வலயங்கள், 150 கல்வி வலயங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முடியுமானால் அதற்கிடையில் பொத்துவில் மக்களின், இந்தக் கோரிக்கையில் தாம் விஷேட கவனம் செலுத்தி, இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அமைச்சர் றிசாத் இங்கு மேலும் கருத்து தெரிவித்தபோது,
2011 ஆம் ஆண்டு (எஸ்.எஸ்.பி) மஜீத் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது, பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயம் ஒன்றை அமைப்பதற்கு, மாகாணசபையில் கொண்டுவந்த முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். அத்தடன் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அந்தப் பிரதேசத்துக்குச் சென்றபோது, தனியான கல்வி வலயம் ஒன்றை அமைத்துத் தருவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் எனவும் அங்கு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை 1998 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு இணைந்திருந்த போது, கிழக்கு மாகாணத்தில் கோமரங்கடவல. கிண்ணியா, பொத்துவில் ஆகியவற்றுக்கென மூன்று தனியான கல்வி வலயங்கள் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, பொத்துவில்லைத் தவிர ஏனைய இரண்டு பிரதேசங்களுக்கும், கல்வி வலயங்கள் வழங்கப்பட்டதை முன்னாள் எம்.பி. மஜீத் அங்கு சுட்டிக்காட்டினார்.
பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம் கிடைத்தால், முஸ்லிம் பிரதேசங்கள் மாத்திரமின்றி கோமாரி, தாண்டியடி, உலனுகே பிரதேசமும், லஹுக்கல, பாணம ஆகிய பிரதேச சபைகளில் உள்ள பாடசாலைகளும் நன்மைபெரும் என்று மஜீத் சுட்டிக்காட்டினார்.