ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என எதிர்பார்க்கலாம்.