அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன்.
அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் வெகுவாக பரவிய இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி பணிக்காக கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய யுகோஸ்லேவியா நாட்டில் உள்ள பெல்கிரேச் நகருக்கு ஹென்டர்சன் சென்றார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பெருமுயற்சியால் அம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு ஹென்டர்சன் தலைமை வகித்தார்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் புளூம்பர்க் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றின் ‘டீன்’ ஆக கடந்த 1977-1990 ஆண்டுகளுக்கிடையே பணியாற்றிய இவர், பின்னாளில் இந்த இருநிறுவனங்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, தயாரிக்கும் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவை உருவாக்கினார். உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றி சுமார் பத்தாண்டுகளில் பரவலாக அம்மை நோயை இவர் கட்டுப்படுத்தினார்.
கடந்த 2001-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவை ‘ஆந்த்ராக்ஸ்’ என்ற கொடிய நோய்க்கிருமி தாக்கியபோது அந்நாட்டின் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான சிறப்பு முகாம் அலுவலகத்தின் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இவரை நியமித்தார்.
அந்நாட்டின் மிக உயரிய விருதான அதிபரின் சுதந்திர விருதை கடந்த 2002-ம் ஆண்டில் பெற்றுள்ள ஹென்டர்சன், சமீபகாலமாக முதுமைசார்ந்த காரணங்களால் பாட்லிமோரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை டி.ஏ. ஹென்டர்சன் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் நேற்று தெரிவித்துள்ளனர்.