கொழும்பு கொம்பனித்தெரு-அக்பர் மாவத்தை பகுதியில் இருந்து மக்கள் பாவனைக்குதவாத ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் மூவரை கைது செய்திருப்பதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் இங்கு குடிநீர் போத்தல்கள் விற்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் போத்தல்களில் இலங்கை தரநிர்ணய முத்திரை இருக்கவில்லை என்றும், குறித்த குடிநீர் போத்தல்களில் கழிவுகள் கலக்கப்பட்டிருந்ததாகவும் நுகர்வோர் அதிகார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த வர்த்தக நிலையமும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குடிநீர் போத்தல்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரச இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கைக்கமைய சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.