மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்துக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் பெரும்பான்மை சமூகத்தினால் உரிமை கொண்டாடப்படும் நிலையில் அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்டு வந்த வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்பவரே இவ்வாறு கிரி/ அதார ஆரம்ப பாடசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2016.08.24 ஆம் திகதியிட்ட இடமாற்றக் கடிதம் நேற்று திங்கட்கிழமையே அதிபரைச் சென்றடைந்துள்ளது. அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்த அக்கிராம பெற்றோர்கள் நேற்றைய தினமே மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இடமாற்ற கடிதத்தில் இடமாற்றத்துக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பாடசாலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை காரணமாக உடனடியாக செயற்படும் வகையில் மாகாண கல்வி பணிப்பாளரின் அனுமதியின் கீழ் கிரி/ அதார ஆரம்ப பாடசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளீர் எனபதை அறியத் தருகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் இடமாற்றத்தை ரத்துச் செய்து கொள்வதற்காக பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியலவாதிகளின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கையாள்வதற்கு வசதியாகவே அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு மைதானத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மும்முரமாக செயற்பட்டு வந்த அதிபரை பழி வாங்குவதற்காகவுமே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவிக்கிறது.
கடந்த 38 வருடங்களாக இந்த பாடசாலை மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம் மைதானத்தை பெரும்பான்மை மக்கள் பயன்படுத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்ததையடுத்தே பிரச்சினை உருவாகியது.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதைப் பகிஷ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாடசாலை விளையாட்டு மைதானத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை ஊழியர்களும் பயன்படுத்தவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலய கல்விக் காரியாலயம் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.