ஐக்கிய தேசிய கட்சி அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பில் எந்தவொரு தீர்மனங்களோ பேச்சுவார்த்தைகளோ கட்சிகள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளே எனவும் தெரிவித்தார்.
உலக வர்த்தக மையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய தேசிய முன்னனியாக தேர்தலில் போட்டியிட்டிருந்தது. ஆனாலும் இம்முறை தனித்து போட்டியிடுவதற்கான கலந்தரையாடல்களே கட்சி மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சி வேறு எந்தவொரு கட்சியுடனும் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்பதை கட்சியின் பொதுச்செயளாளர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூற முடியும். தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியாக போட்டியிடவே நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.(vi)