கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு பொருளாதார தடைகளைகளும் வடகொரியா மீது விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியா உடனான அதிகப்படியான பதற்றத்தை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக் பசிபிக் துறைமுகத்தில் நடைபெற்ற தொழில் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது புதின் இதனை தெரிவித்தார்.
வடகொரியா மீதான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.நா.வின் விதிமுறைகளையும் வடகொரியா கடைபிடிக்க வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தென் கொரியா அதிபர் பார்க் ஜியுன்-ஹைன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.