Breaking
Fri. Jan 17th, 2025

எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு இதற்கான பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது.
தற்போது மக்க ளுக்கு அரசின் மீது வெறுப்பும், ஐ.தே.க. மீது நம்பிக்கையும் வந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலு டன் ஆட்சியை ஐ.தே.க. மாற்றியமைக் கும் என்று மேல் மாகாணசபை உறுப்பி னர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இனவாத செயற்பாடுகள் மற்றும் தற் போதைய அரசியல் நிலவரங்கள் தொடர் பாக “சுடர் ஒளி’க்கு அவர் வழங்கிய பேட்டி கீழே வழங்கப்ப ட்டுள்ளது.

கேள்வி:

பொதுபலசேனா அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

 பதில்:

இனவாத அமைப்பான பொதுபல சேனா கடந்த இரண்டு வருடங்களாக ஹலால், நிகாப், புர்கா மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் பல பொய்யான கருத்துகளைப் பரப்பி வந்தது. ஆனால், அண்மைக்காலமாக இந்த அமைப்பு புதிய புத்துணர்ச்சியுடன் செயற்படுகின்றது. காதி நீதிமன்றங்கள், இஸ்லாமிய வங்கி முறைமைகள், மத்ரஸாக்கள் மற்றும் உலக தீவிரவாதத்துடன் முஸ்லிம்கள் தொடர்புள்ளனர் போன்ற பொய்யான கருத்துகளைப் பெரும்பான்மை மக்களிடையே பரப்பி வருகின்றது.
இது தொடர்பில் எமது நிலைப்பாடு என்னவென்றால், இவர்கள் கூறுவது போன்று இங்குள்ள முஸ்லிம்களுக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்குமா யின் அதனை இவர்கள் நிரூ பிக்க வேண் டும்; இது மாத்திரமல்ல, இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் பொய்க் கருத்துகளைப் பரப்பி வருவதால் அப்பாவி முஸ்லிம்களே இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். இலங்கைவாழ் முஸ்லிம்கள் எவ்வித சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர்.
இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை பல அமைப்புகள் முன்னைய வரலாற்றில் பரப்பி வந்துள்ளமை நாம் அறிந்தவிடயமே. ஆனால், பொதுபல சேனாவுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம், அரச அனுசரணை போன்று அவற்றுக்குக் கிடைக்கவில்லை.
வரலாற்றில் அநாகரிக தர்மபால, சோமதேரர் ஆகியோர் முஸ்லிம்கள் பெளத்த கலாசா ரத்தை ஏற்றுக்கொள்ளல், முஸ்லிம்களுடைய விவாகச் சட்டத்தை நீக்கி நாட்டில் ஒரு சட்டம் மாத்திரம் இருக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கையின் தொடர்ச்சியையே தற்போது பொதுபல சேனா செய்துவருகின்றது.

கே: முஸ்லிம் அமைப்புகள் அசின் விராது தேரருக்கு இலங்கைக்கு வர வீசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வீசா வழங்கப்பட்டமையும், அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டமையும் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இலங்கை அரசின் அனுச ரணையுடன் அசின் விராது தேரர் திட்டமிட்டவகையிலேயே இலங்கைக்கு வந்தார். ஊவா மாகாண சபைத் தேர்தல் முடியும்வரை காத்திருந்த பொதுபலசேனா மீண்டும் தனது இனவாதச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 28ஆம் திகதி சங்க மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
எதிர்காலத்தில் இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கான ஒரு அபாய சமிக்ஞையாக விராது தேரரின் வருகை அமைந்துள்ளது. அவரின் கொள்கைகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்வதற்காகவே பொதுபல சேனா அவரை இங்கு வரவழைத்துள்ளது.

பல முஸ்லிம் அமைப்புகள் அசின் விராதுக்கு வீசா வழங்கக்கூடாது என அரசிடம் கோரிக்கை விடுத்தும்கூட அவருக்கு வீசா வழங்கப்பட்டமையானது அரசின்மீது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் பல முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. பலருக்கு சுற்றுலா வீசாவைக் காணரம்காட்டி சமய விடயங்களில் ஈடுபடாது செய்துள்ளனர். மேலும், சனல் – 4 ஊடகவியலாளர் கெலன் மெக்ரைனுக்கு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இடமளிக்காது சுற்றுலா வீசாவைக் காரணம் காட்டினர்.
ஆனால், அசின் விராது தேரர் பொதுபல சேனாவின் இனவாத மாநாட்டில் கலந்துகொண்டமை மாத்திரமல்லாது. இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியயான்றிலும் கலந்துகொண்டார். இவருக்கு இந்தளவு சுதந்திரம் யாரால் வழங்கப்பட்டது? இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு அரசின் பூரண அனுசரணை உள்ளது என்பது நிரூபணம்.

அதுமட்டுமல்லாது, அவருக்கு சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அவர் மியன்மாரின் ஜனாதிபதியா? மக்களால் பெளத்த தீவிரவாதத்தின் முகமாக வர்ணிக்கப்படும் இவருக்கு யாரால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது? பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்­வே இதற்கான திட்டமிட்ட ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துள்ளார். இவர்களது அனுசரணையின்றி இவ்வாறு விசேட பாதுகாப்பு ஒருபோதும் வழங்கமுடியாது.

ஜனாதிபதி நியூயோர்க்கில் முஸ்லிம் அரச தலைவர்களைச் சந்தித்து, “”இலங்கை முஸ்லிம்கள் எங்களுடைய சகோதரர்கள். இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் வராது” இவ்வாறு வாக்குறுதி வழங்கியிருந்தார். அவர்கூறி 24 மணித்தியாலங்களுக்குள் அசின் விராது இலங்கைக்கு வந்திறங்கினார்.
சங்க மாநாட்டில் அசின் விராதுவின் உரையில் இலங்கைக்கு வருவதற்கான வீசா வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த அரசின் வேடம் கலைந்துள்ளது. பொதுபல சேனாவின் தலைமையகம் ஜனாதிபதி காரியாலயத்திலேயே உள்ளது. அரசே இனவாதத்தைப் பாலூட்டி வளர்க்கின்றது.

கே: இவ்வாறெனில் இனவாத செயற்பாடுகளுக்கு அரசு அனுசரணை வழங்குவதாக எவ்வாறு கூறுகிறீர்கள்?
ப: இதனை எமக்கு உறுதியாகக் கூறமுடியும். ராஜபக்­வின் ஆட்சியின் கீழே இவ்வாறான இனவாத அமைப்புகள் வலுப்பெற்றுள்ளன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
இலங்கை வரலாற்றில் சிங்கள தேசியவாதம் என்பது ஒரு புதிய விடயமல்ல. பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் இதற்காக செயற்பட்டுவந்தன. ஆனால், அந்த அமைப்புகளுக்கு எந்த விதமான அரச அனுசரணையும் கிடைக்கவில்லை. ஐ.தே.கவின் காலத்திலும் சுதந்திரக் கட்சியின் காலத்திலும் இவ்வாறான நிலையே காணப்பட்டது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் இனவாத அமைப்புகளை அரசு வளர்த்துவிட்டுள்ளது. யுத்தகாலத்தில் தமிழர்களை எதிரிகளாகக் காட்டிய இனவாதிகள் தற்போது முஸ்லிம்களை எதிரிகளாக சித்திரிக்கின்றனர்.
இனவாத செயற்பாடுகளை அரசு ஆதரிப்பதற்குக் காரணம், சிங்கள வாக்காளர்களை தம்பக்கம் ஈர்த்துக்கொள்வதற்காகும். அரசியல் நோக்கங்களுக்காகவே அரசு இனவாத அமைப்புகளை ஆதரிக்கிறது.

கே: ஆனால், அரசுடன் பல முஸ்லிம் தலைவர்கள் கைகோத்துள்ளனரே இதுகுறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ப: இது முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் மிகவும் கவலையான – துன்பகரமான காலம் என்றே கூறவேண்டும். ஏனெனில், முஸ்லிம்களை இலக்காகக்கொண்டு இனவாத அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அரசு அனுசரணை வழங்குவது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. ஆனாலும், முஸ்லிம் தலைமைகள் இதற்கெதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தமை முஸ்லிம்களுக்குச் செய்கின்ற பெரும் அநியாயமாகும்.
பொதுபல சேனாவின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தவறியுள்ள அரசுடன் ஏன் இந்த முஸ்லிம் தலைமைகள் ஒட்டிக்கொண்டுள்ளன என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது பெரும்பான்மை சமூகத்துக்கும் தோன்றும் கேள்வியாகும்.
வெட்கமின்றி இந்த அரசுடன் இருப்பது பதவிகளுக்காகவும், அரசால் வழங்கப்படும் சலுகைகளுக்காகவுமாகும். இதை விட்டு வருவதற்கு எவரும் தயாரில்லை என்பதே எமது கருத்தாகும்.
அவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றும் வகையிலேயே இதுவரைகாலமும் செயற்பட்டுள்ளனர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அரசைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்படுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அரசுடன் 17 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தபோதும் அவர்களால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முடியாது போயுள்ளது. ஆனால், சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் தலா 2 உறுப்பினர்கள் வீதமே உள்ளனர். ஆனாலும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் அரசைப் பலவந்தப்படுத்துகின்றனர். அவர்களுக்கே முடியுமென்றால் ஏன் 17 முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் செய்யமுடியாது?
இவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்கின்ற அநீதிக்கு பதில் கூறியே ஆகவேண்டும்.

கே: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐ.தே.கவின் தயார்ப்படுத்தல்கள் எவ்வாறு உள்ளன?
ப:ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், ஐ.தே.க. இதற்கான தயார்படுத்தல்களை மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளது.
ஐ.தே.க.சார்பில் நிச்சயம் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் முன்னிறுத்தப்படுவார். இதற்காக மற்றைய கட்சிகளுடன் பேச்சுகளை நடத்திவருகின்றோம். தேர்தலுக்கான திகதி அறிவித்ததும் நாம் நடத்திய பேச்சுகளின் முடிவுகள் நிச்சயம் எமக்குச் சார்பாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஊவா தேர்தலில் அரசுக்கு ஏற்பட்ட பின்வாங்கல்கள் காரணமாக அரசு தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சற்றுத் தயங்குகிறது. இதனால் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது நாடாளுமன்றத் தேர்தலையாவது நடத்தக்கூடும்.
எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு, இதற்காக பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது.
தற்போது மக்களுக்கு அரசின்மீது வெறுப்பும், ஐ.தே.க.மீது நம்பிக்கையும் வந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் ஐ.தே.க.ஆட்சியை மாற்றி அமைக்கும்.

கே: ஆட்சி மாற்றம் செய்வதாக இருப்பின் தற்போது ஐ.தே.கவில் நிலவுகின்ற பிளவுகள் உங்களுக்கு பாதகமாக அமையுமல்லவா?
ப: கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்படுவது என்பது சகஜம். உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் ஏற்படுவதும் சாதாரணமான விடயம். அரசுக்குள்ளும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.
சிறிமாவோ பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும்போது அக்கட்சி பத்துக்கு மேற்பட்ட குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது. ஆனால், ஐ.தே.க. அவ்வாறான நிலைக்குத் தள்ளப்படவில்லை.
தற்போது ஐ.தே.கவில் எந்தவிதமான பிளவுகளும் கிடையா. தலைமைத்துவத்தின் சரியான தீர்மானங்கள் இந்நிலையை உருவாக்கியுள்ளன. தகுதியானவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அனைவரது நோக்கமும் ஐ.தே.க.அரசொன்றை நிறுவுவதேயாகும்.
அரசியல் ரீதியாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியும். இதனால் சில கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதுமுண்டு. இதற்காக கட்சி தலைதூக்க முடியாது என்று கூறமுடியாது.

கே: அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பில் வியாபார நிலையங்கள், சேரி வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மேல்மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ப: அரசின் இவ்வாறான அபிவிருத்தியால் கொழும்பில் வாழ்கின்ற மக்களுக்கு எந்தவித பயனுமில்லை. மாறாக, அவர்களது தொழில் வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசின் உள்நோக்கங்களும் உள்ளன. கொழும்பில் வாழ்கின்ற 50 வீதத்துக்கு அதிகமான தமிழ்பேசும் மக்களின் சனத்தொகையைக் குறைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றது.
இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கையால் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இழக்கப்பட்டுள்ளன. இதற்கு சரியான முறையில் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
இதனால் பயனடைபவர்கள் அரசால் செல்வந்தராகிய தரப்பினர் மாத்திரமே. மாறாக இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் கிடையாது.

Related Post