அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
சிறுவர், சிறுமியர் இடையே கவிதை இயற்றும் ஆற்றலை ஊக்குவிக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தல் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், நேற்று நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சியில் பலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். சென்னையில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியருக்கு அமெரிக்காவில் பிறந்த 17 வயது பெண்ணான மாயா ஈஸ்வரன் ஆங்கிலத்தில் இயற்றி வாசித்த ஒரு கவிதை, ஒபாமாவின் மனைவி மிச்சேல் உள்பட அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
’கடந்த 16 ஆண்டுகளாக நான் இழந்த பலவற்றைவிட மிக முக்கியமான ஒன்றை நான் தொலைத்து விட்டேன். தலைமுடி உதிர்வதைப்போல் எனது இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் எனது தாய்மொழியான தமிழைப்பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன. தாயே!, வெகுவிரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்’ என்ற தாய்மொழியான தமிழ்ப்பற்று தொடர்பான தனது கவிதையை மாயா வாசித்து முடிப்பதற்குள் அந்த கவியரங்கத்தில் இருந்த அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் உள்பட அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ச்சியடைந்து, பலத்த கரவொலி எழுப்பி பாராட்டினர்.
உணர்ச்சிப்பெருக்கை அடக்கமுடியாத மிச்சேல் ஒபாமா, ‘ஊஊஊ’ என்று கூச்சலிட்டு மாயாவை உற்சாகப்படுத்தினார். ’மாயா நீ மிக சிறப்பாக உனது உள்ளக்கிடக்கையை இந்த கவிதையில் வெளிப்படுத்தி விட்டாய்’ என மேடையில் அவரை வாழ்த்தினார்.
சென்னையை சேர்ந்த தந்தைக்கும் கேரளாவை சேர்ந்த தாய்க்கும் மகளாக அமெரிக்காவில் பிறந்த மாயா ஈஸ்வரன், எனது தாய்மொழியை இன்னொரு மொழியால் இட்டுக்கட்டி வாழ வேண்டிய எனது வலியை அந்த கவிதையில் பதிவு செய்திருந்தேன் என உருக்கமாக கூறினார். எங்களது தமிழ் கலாச்சாரம், பண்பாடு தொடர்பாக பல கவிதைகளை நான் எழுதியுள்ளேன். எதிர்காலத்தில் ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற தனது இலட்சியக் கனவையும் நிருபர்களிடம் அவர் வெளிப்படுத்தினார்.
இதே கவியரங்கத்தில் இந்திய அமெரிக்கரான கோபால் ராமன் என்ற 17 வயது மாணவரும் ‘ஆப்பிள்’ என்ற தலைப்பில் தனது கவிதையை வாசித்தமைக்காக சிறப்பிக்கப்பட்டார்.