இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்கும் முடிவெதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அது தொடர்பில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிராகரிக்கும் அரசாங்கம்.“எட்கா” உடன்படிக்கை இறுதி வடிவம் பெற்றதும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னரே கையெழுத்திடப்படுமென்றும் அறிவித்தது.
இதுதொடர்பாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அரசாங்கம் எதைச் செய்தாலும் அதனை வெளிப்படைத் தன்மையாகவே மேற்கொள்ளும். நாட்டுக்கும் மக்களுக்கும் அனைத்தையும் அறியத்தருவோம்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தையோ அல்லது இலங்கையின் வேறெந்த விமான நிலையங்களையோ அல்லது துறைமுகங்களையோ இந்தியாவுக்கு வழங்குவதற்கான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.
அனைத்தும் அரசின் நிர்வாகத்தின் கீழேயே இருக்கும். இது தொடர்பாக வெளியான வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை.
பொது எதிர்கட்சியினர் எனக் கூறிக்கொள்வோரும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இதுபோன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இன்றைய இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.