ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜூன் 23-ம் தேதி இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.
அவரை தொடர்ந்து தெரசா மே இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது, தொடர்ந்து தனது கன்சர்வேடிவ் கட்சி எம்.பி பதவியை வகித்து வந்தார்.
இந்நிலையில், டேவிட் கேமரூன் தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேமரூன், பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று பதிலளித்தார்.
டேவிட் கேமரூன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விட்னி என்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி-ஆக கேமரூன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.