Breaking
Mon. Dec 23rd, 2024

கிழக்கின் உதய தாரகையாகத் தோன்றி ( 23.10.1947 ல்)  நாட்டின் அரசியல் வானில் ஒளிபரப்பி முஸ்லிம்களை  அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அரும் பாடுபட்டு அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து “சத்தியமே இலட்சியம்” என்று பறைசாற்றி அதன் வெற்றிப் பாதையையும் காட்டி விட்டு அதற்காகத் தன்னையே தியாகம் செய்துவிட்டு  மாபெரும் தலைவர் மர்ஹூம் எம். ஏச். எம். அஷ்ரப் அவர்கள் 16. 09. 2000 ல் இவ்வுலகை விட்டு இறையடி சேர்ந்தார்கள்.

சுதந்திரத்தின் பின்  அரசியல் அநாதைகளாயிருந்த முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரத்தை  வென்று கொடுத்து அதன் மூலம்   அரசியல் முகவரியையும் அடையாளத்தையும் முத்திரை குத்திச் சென்றவர் மாபெரும் தலைவர் அஷ்ரபேயாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் , இனக்கலவரங்கள் ஆகியவற்றின் மத்தியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு துணிவுமிக்க அரசியல் வழியைக் காட்டிக் கொடுத்தவர் இம்மகான்தான். அறிவும், ஆற்றலும், சமூக உணர்வும் , ஆளுமையும் கொண்ட இவர் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சி, அதனது கல்வியறிவிலும்  ஒற்றுமையிலுமே தங்கியுள்ளது என்பதை வற்புறுத்தி  பல பாடசாலைகளை அமைத்ததோடு மும்மொழிகளின் முக்கித்துவத்தையும் வற்புறுத்தி முதன்முதலாக முஸ்லிம் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். தனது 6 வருட குறுகிய கால அமைச்சர்  பதவி காலத்தில்  முஸ்லிம் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றையும்  ,பல்கலைக்கழகம் ஒன்றையும்  நிறுவியதோடு முஸ்லிம்; பிரதேசங்களில் இருந்த பாடசாலைகளை மறு சீரமைக்கவும்  புதிய பாடசாலைகளை அமைக்கவும்  முனைப்புடன் செயல்பட்ட அவர் வடக்கிலருந்து தெற்குவரை இருந்த இளைஞர்களுக்கும்  , யுவதிகளுக்கும் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களை எல்லா  இனங்களும் பயன்படும் விதமாக வழங்கினார்.
தலைவர் அஷ்ரபுடைய அர்ப்பணிப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான சேவை என்னவெனில் 1980 களில் முஸ்லிம் வாலிபர்கள்  அரசியல் ரீதியாக வழிதவறி  பயங்கரவாத இயக்கங்களில் சேர்வதைத் தடுத்து அவர்களை அரசியல் மயப்படுத்தி  தேசிய அரசியல்  நீரோட்டத்தில்  சேர்த்ததேயாகும்.  அதன் மூலம் நாட்டின் வடகிழக்கில் பிரிவினைவாத பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்காததன் மூலமும்  அவ்வியக்கங்களில் எமது இளைஞர்கள் சேராமல்  தடுத்ததன் காரணமாக  இந்த நாட்டின் இறைமையையும்  ஐக்கியத்தையும் பாதுகாத்தார் என்பது இந்த நாட்டுக்கு செய்த சேவைகளில்  மகத்தானது என்று கூறினால் அது மிகையாகாது.
அன்று மர்ஹூம் அஷ்ரபின் கீழ் தலை நிமிர்ந்து வீறு நடை போட்ட சமூகம் இன்று அடிமையாவதா?  அகதியாவதா? அல்லது அடையாளங்களையும் முகவரிகளையும் இழந்து அனாதைகளாகக் கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு உட்படுவதா என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. அன்று முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்று போற்றப்பட்ட அஷ்ரபிடம் தனது கட்சியின் மீதான பற்றுதலும் சமூகத்தின் மீதான உணர்வும் தனது மார்க்கத்தின் மீதான அவவாவும் மேலோங்கி இருந்ததனால்தான், இரவு பகலாகத் தூக்கமின்றி சமுதாயத்தை காத்து நின்றார்.
தான் உறங்கினால் சமுதாயமும் உறங்கி விடும் என்ற  உணர்வினால்  விழித்திருந்து சமூகத்தின் உரிமைகளுக்காகப்  போராடிய அந்த மகானை எம்மால் இலகுவில் மறந்து விட முடியாது. ஆனால், இன்று முஸ்லிம் கட்சித் தலைவனாகக் கூறிக் கொள்ளும் தலைமைத்துவத்திடம் மேற்கூறிய  தலைமைத்துவப் பண்புகளும் ஆளுமையும் இருக்கின்றதா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.  மறைந்த தலைவரின் பின்  இன்றுவரை  16 வருட காலங்களுக்குள் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைத்த நன்மைகள்,சேவைகள் என்ன? என்று கேட்டால் நாம் மௌனம் சாதிக்கும்  நிலைக்கே தள்ளபடுவோம்.

அரசியலிலே மீட்சி பெற்று இந்த நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக உன்னத நிலை பெற்றிருந்த அன்றைய முஸ்லிம்களின் தலைமைத்துவம்; இன்று தனது உரிமைக் குரலை எழுப்ப முடியாது ஒதுங்கியும்  பதுங்கியும் இருக்கும்  துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் விழித்தெழுந்து அரசியல் சிந்தனையோடு புதியதோர் யுகம் படைக்க முன்வர வேண்டிய காலம் இப்பொழுது கனிந்துள்ளது என்பது அரசியல் அவதானிகளின் சரியான கணிப்பாக இருக்கின்றது.

“போராளிகளே புறப்படுங்கள்” என்ற அன்றைய மாபெரும் தலைவரின்  முழக்கத்துக்கு ஏற்ப சொற்போர், கருத்துப் போர் புரிந்து முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார  உரிமைகளை வென்றெடுக்க துணிவோடும் தியாகத்தோடும் அஞ்சா நெஞ்சம் கொண்டு அறிவுப் போர் மூலம் சமுதாயத்தைக் காக்கும் அரசியல் தலைமைத்துவத்தை இனங்கண்டறிவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். பாதை தவறிய தலைமைத்துவத்திற்கு பதிலாக உரிமை காத்து வெற்றிப்  பாதை காட்டும் தலைமைத்துவமே இன்று அவசிமாகின்றது.  இந்த தலைமைத்துவ தாகத்தின் தேடலில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டு வரக்கூடிய  அரசியலமைப்பு, சீர்த்திருத்தங்களிலும் தேர்தல் தொகுதி அமைப்பு சீர்த்திருத்தங்களிலும்  மிக முக்கிய கவனம் செலுத்தி அவதானமாக நடந்து தனக்கொரு தகுதியான தலைவரைத் தேடிக்கொள்வதில் முஸ்லிம் சமூகம் மும்முரமாக ஈடுபடுவது   அச் சமுதாயத்தின் தலையாய கடமையாக இருக்கின்றது. இல்லையேல் தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவுகள் கரைந்து போகும் ஆபத்தான நிலைக்கு உட்படலாம்.  “உரிமை காக்க ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து நிற்போம்”.  “மீட்சிதரும் தலைமைத்துவம் நோக்கி புறப்படுவோம். அதற்காக சமூகப் போராளிகளே புறப்படுங்கள்” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அறைகூவலை ஞாபகப்படுத்தி விடைபெறுகின்றேன்.

எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

By

Related Post