Breaking
Sat. Nov 23rd, 2024
சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
தெரண தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
‘உயர்மட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளாவிடினும், அனுபவம் மிக்க அதிகாரிகளினதும், படையினரதும் சேவைகளை இழந்து விடக்கூடாது.
ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்படுவதால் ஏற்படும் நிலை குறித்து சிறிலங்கா அதிபருக்கு எடுத்துக் கூறும் வாய்ப்புக் கிடைத்தது.
நீர்கொழும்பில் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளை சிறிலங்கா அதிபர் சந்தித்த போது, இதுபற்றி அவரிடம் எடுத்துக் கூறும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்போது சிறிலங்கா அதிபருக்கு அடுத்த ஆசனத்தில் இருந்த அமைச்சர் ஒருவர் அதனைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
நாட்டுக்காக பணியாற்றியவர்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் சிறிலங்கா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.
உலகின் வல்லமை மிக்க நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் போலவே, மலேசியாவில் இருந்து புலிகளின் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனை சிறிலங்கா  இராணுவப் புலனாய்வுப் பிரிவு கொழும்புக்கு கொண்டு வந்தது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு நாட்டின் நலன்களுக்காக மிகச்சிறந்த சேவையை ஆற்றியுள்ளது.
ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, புலனாய்வுச் சேவைகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யக் கூடாது.  அத்தகைய நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

By

Related Post