அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய பலமான எதிரணியினை உருவாக்கும் நோக்கிலேயே எமது நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் போது வேட்பாளர் யார் எனும் துரும்புச்சீட்டினை களத்தில் இறங்குவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சோபித தேரரா? சந்திரிக்காவா? ரணிலா? என யாரும் குழம்பத் தேவையில்லை. வெகு விரைவில் விடை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்கட்சிகள் சிந்துத்துக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதி தேர்தல் ஆட்சியினை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாகும். இம்முறை தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்கட்சிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. எனினும் சகல எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பலமானதும் அரசுக்கு சவால் விடுக்கக்கூடியதுமான பொது எதிரணியொன்றினை உருவாக்கும் நோக்கத்திலேயே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதியான தீர்மானம் முன்வைக்கப்படாவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியினை அரசாங்கம் தெரிவிக்கும் நேரத்தில் நாம் யாரை களமிறக்கப் போகின்றோம் என்பது தெரியவரும். எமது துரும்புச் சீட்டு யார் என்பது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலானதாக அமையும்.
மேலும், நாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தேர்தல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. அதேபோல் வேறு யாருடனும் பொது வேட்பாளர் தொடர்பில் பேசவுமில்லை. மாதுலுவாவே சோபித தேரரை ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை, ரணில் விக்ரமசிங்கவை, சந்திரிக்கா குமாரதுங்கவை என பலரின் பெயர்களை பொது வேட்பாளராக களமிறக்க பலர் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், யாரை வேட்பாளராக்கப்போகின்றோம் என்பது வெகுவிரைவில் நாம் தெரிவிப்போம். அதற்கான நடவடிக்கைகள் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.