Breaking
Fri. Nov 15th, 2024

-சுஐப் எம்.காசிம்   –

வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை ஆசிரியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,

வடமாகாணத்திலிருந்து சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் கட்டாய இடப்பெயர்வினால் வந்த அகதி மக்களின் கல்வி, சுகாதார தேவைகளுக்காக நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டிருந்தோம். அந்த மக்களின் நலனுக்காக அவர்களின் பிரதிநிதி என்ற வகையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நான் தனி மனிதனாக நின்று போராடி இருக்கின்றேன். அந்த வகையில் வடமாகாணத்துக்குட்பட்ட கல்வி வலையங்களின் நிருவாகத்தின் கீழ் இங்கு ஆறு பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. இடம்பெயர்ந்த பிள்ளைகளையே பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பாடசாலைகளில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

அதே போன்று மருத்துவ வசதிக்காக ஆறு வைத்தியசாலைகளை நாங்கள் அமைத்து, பணியாளர்களையும் தொழிலுக்கு அமர்த்தினோம். அவை இன்னும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டு வடக்கு மாகாணசபை நிர்வாகம் வந்த பின்னர், புத்தளத்தில் இயங்கும் இவ்வாறான பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மூட வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. வடக்கு மாகாண சபையின் கல்வி, மருத்துவ நிறுவனங்களின் பரிபாலிப்பில் புத்தளத்தில் இயங்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாடசாலைகளும், வைத்தியசாலைகளும் இருப்பதால் தங்களுக்கு அதனால் மேலதிகச் செலவு என்ற காரணத்தைக் காட்டியே அவற்றை மூடி விடுமாறு அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாங்கள் பல்வேறு இடர்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணும் வகையில் வடக்கு மக்களின் மீள்குடியேற்ற செயலணி சில திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் நான் அன்று தொடக்கம் இன்று வரை மேற்கொண்டு வரும் அத்தனை முயற்சிகளையும் நீங்கள் நன்கறிவீர்கள். அரசாங்கத்தின் உதவியின்றி எங்களது தனிப்பட்ட முயற்சியினால் வெளிநாடுகளிலிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நாம் பெற்றுக்கொண்ட உதவியினாலேயே   வடக்கிலே பல கட்டடங்களையும், வீடுகளையும் கட்டினோம். அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அதனால் நான் படுகின்ற கஷ்டங்களும் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

மீள்குடியேற்றம் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் வவுனியா, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கணிசமான அளவு குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.    

மீள்குடியேறச் சென்றவர்கள் சிலர் தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறார்கள். பலர் திரும்பி புத்தளம் உட்பட தென்னிலங்கை பிரதேசங்களுக்கு வந்துவிட்டனர். காணிப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, குடிநீர், வாழ்வாதார பிரச்சினைகளால் இவர்கள் அங்கு வாழ முடியாது திரும்பிவிட்டனர்.

அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணி, அகதிகளின் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கும். வடக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு வினாக்கொத்துக்கள் அடங்கிய விண்ணப்பப் படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும்.

மீள்குடியேற விரும்புவோரும், தொடர்ந்தும, தென்னிலங்கையில் தங்க விரும்புவோரும் இதன் மூலம் இனங்காணப்படுவதோடு, வடக்கிற்கு செல்ல விரும்புவோருக்கு உரிய தீர்வுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கருத்துத் திரட்டலை சுயாதீனமாகவும். சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம்  பெறப்படும் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மீள்குடியேற்ற செயலணி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.    

  14643070_657353284430720_631471921_n

          

By

Related Post