Breaking
Sun. Dec 22nd, 2024

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல் உலமாவின் கண்டிக்  கிளைத் தலைவர் உமர்தீன் ஹாஜியார். செயலாளர் அப்துல் கபார் ஆகியோர் உட்பட ஜம்இய்யாவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உலமாக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலில் நாங்கள் முக்கியமானதொரு தருணத்தில் இருக்கின்றோம். அரசியலமைப்பை மாற்றுவதற்கான முனைப்புகள் மிகவேகமாக இடம்பெறுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் திருமணச் சட்டத்திலும் மாற்றங்களைப் புகுத்த வேண்டுமென்று ஒருசில பெண்ணிலைவாத அமைப்புக்கள் குரல்கொடுத்து வருகின்றன. இளம் பெண்களை மனம்போன போக்கில் திருமணம் செய்வதும், அவர்களை காரணங்களின்றி கைவிடுவதும், விதவைகள் ஆக்குவதும் அதிகரித்து வருவதாகக்கூறி, எமது சமுதாயத்தின் மீது அவ்வமைப்புக்கள் விரல்நீட்டி வருகின்றன.

இது சம்பந்தமாக சில யதார்த்தங்களைக் கூறும் சிலர், ஒரு கிராமத்தில் மட்டும் இவ்வாறு பாதிக்கப்பட்ட 155 விதவைப் பெண்கள் இருப்பதாகத் தெரிவித்து, சில நியாயங்களை அடுக்கிக்கொண்டு போகின்றனர். ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமூகநல அமைப்புக்களுடன் கலந்துபேசி, இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், எடுத்த எடுப்பில் முஸ்லிம் திருமணச் சட்டத்தைக் குறைகூறுவதில் பயனில்லை எனவும், இது தொடர்பில் என்னுடன் உரையாடிய ஒருசிலருக்கு நான் அறிவுரை வழங்கினேன். இவ்வாறான சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கு நாங்கள் காரணமாக அமையக் கூடாதென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜம்இய்யதுல் உலமா கடந்த பல தசாப்தங்களாக ஆற்றிய பணிகள் அபரிமிதமானது. முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார விடயங்களில் கரிசனைகாட்டி வருவதோடு, அவர்களின் கலாசார விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒரு சிறந்த அமைப்பாகவும் அது  விளங்குகின்றது.

முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும், பேதங்களையும் களைந்து, அவற்றுக்குச் சமரசம் காணும் இயக்கமாகவும் ஜம்இய்யதுல் உலமா திகழ்கின்றது.

கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரிடத்தில் கூடச்செய்து, முஸ்லிம்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

தப்லீக், தௌஹீத், ஜமாஅதே இஸ்லாமி, தரீக்கா போன்ற இயக்கங்கள் எல்லாம் இன்று ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில், சமூகத்தின் நன்மைக்காக இயங்கி வருவது, நல்ல விடயமாக இன்று பார்க்கப்படுகின்றது.     

ஒரு சமுதாயத்தில் கருத்து வேறுபாடுகள் எழுவதும், அதனைத் தர்க்கிப்பதும், பின்னர் அதற்குச் சமரசம் காணுவதும் ஓர் ஆரோக்கியமான விடயமே. ஏனெனில், அதன் மூலமே பல்வேறு பிரச்சினைகளுக்குத் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

எனினும், நமக்குள் ஏற்படும் கருத்து பேதங்கள் ஊடகங்களுக்குச் சென்றடைந்து,  பிறர் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்குமளவுக்கு நமது செயற்பாடுகள் அமையக் கூடாது.

“இஸ்லாமிய மார்க்கத்தில் எங்கோ, ஏதோ தவறு இருக்கின்றது” போன்ற ஒரு பிழையான பார்வையை, ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

ஜம்இய்யதுல் உலமாவின் “மக்தப்” என்ற திட்டம் நமது சமூகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனைக்கூட  விமர்சிப்பதற்கு சிலர் துடியாய்த் துடித்து வருகின்ற போதும், எவ்வாறு இதனை விமர்சிப்பது என்பதிலே அவர்கள் தட்டுத்தடுமாறி நிற்கின்றனர். “மக்தப்” திட்டத்தில் எந்த ஓட்டைகளையும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜம்இய்யதுல் உலமா வழங்கும் சில பத்வாக்களை ஒருசிலர் விமர்சித்து வருகின்றனர். அவ்வாறானவர்களை அவசரமாக அழைத்து, விரோதிகளாக நோக்காமல் அவர்களுடன் கலந்து பேசுவதே ஆரோக்கியமானது. ஜம்இய்யதுல் உலமா இவ்வாறான விடயங்களில் உரிய செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே, நமது சமூகத்தைப் பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் சமூகவலைத் தளங்களில் இவ்வாறான செய்திகள் வேகமாகப் பரவி, எதிர்காலச் சந்ததிக்கு ஒருபெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என அமைச்சர் கூறினார்.

14686653_659303890902326_929798433_n 14699956_659303377569044_1449352059_n 14657689_659303450902370_2145238284_n

By

Related Post