Breaking
Sat. Sep 21st, 2024

-சுஐப் எம்.காசிம் –

இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று

வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர்

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா

பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ

சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம்

அந்தரித்தலைந்து சொத்து நகைபணம் தொழில் இழந்தோம்

தங்கிய கல்வியோடு கடைகண்ணிப் பொருள் இழந்தோம்

கப்பமும் பெற்றார் எம்மைக் கைதியாய்ப் பணயம் வைத்தார்

புத்தளம் குருநாகலில் அனுபுரம் கொழும்பு மண்ணில்

பித்தராய் அலைந்த எம்மைப் பேணினார் முஸ்லிம் சான்றோர்

பசிக்குணவளித்தார் எங்கள் பரிதாப நிலையைத் தீர்த்தார்

இசைவுடன் காணிதந்தார் எல்லோர்க்கும் முகாமமைக்க

முகாமிலே வாழ்ந்தக் காலம் மறக்கொணாத் துயரவாழ்வு

நூறடி பரப்புக் கொண்ட முகாமிலே நுடங்கிவாழ்ந்தோம்

படுக்கையும் படிப்பும் மற்றும் சமையலும் அவ்வீட்டில்தான்

பரிதாப நிலையில் எங்கள் காலமும் கழிந்ததையா

குடிநீரும் தட்டுப்பாடு குளிக்கவும் கியூவில் நின்றோம்

வெளிச்சமும் இல்லை மற்றும் கழிப்பறை வசதியில்லை

பள்ளி செல்மாணவர்க்குப் படிக்கவும் வசதியில்லை

நல்ல வாழ்வெப்போ கிட்டும் என்றெதிர்பார்த்திருந்தோம்

போரது முடிந்தபோது புதுவாழ்வு பெறலாம் என்று

ஆரவாரித்தோம் சொந்த நிலபுலம் காணஎண்ணி

காடுகள் அழித்தபோது காடெலாம் அரசுக்கென்றார்

மாபெரும் குற்றம்சாட்டி மறித்தனர் துவேஷக்கூட்டம்

வன்னியின் தலைவரான அமைச்சராம் றிசாத் மட்டும்தான்

உன்னிப்பாய் எங்களுக்கு உதவினார் ஆபத்துவேளை

கண்ணியம் மிக்க அந்தக்கனவானும் இல்லையென்றால்

என்னவோ நடந்திருக்கும் ஏமாற்றம் நிலைத்திருக்கும்

அகதியைப் பற்றிப் பேசிப்புலம்புவார் அநேகர் உண்டு

ஐப்பசி கடந்துவிட்டால் அப்புறம் மறந்துபோவார்

கூட்டங்கள் கூடிச்செய்தி படங்களைப் போடுவிப்பார்

நாட்டமாய் அகதி வாழ்வுக்குதவிட யாருமில்லை

தன்கையே தனக்குவேண்டும் உதவியென்றெண்ணி நாமும்

உண்மையாய் ஒருமைப்பட்டு உழைத்திடல் வேண்டும் ஐயா

திண்ணமாய் அமைச்சர் ஆக்கும் செயலணி வழியில் நின்று

தீர்த்திட வேண்டும் எங்கள் தீராத பிரச்னை எல்லாம்

அரசினர் உதவியில்லை ஐநாவும் உதவவில்லை

கரிசனையோடு எம்மைக் கவனிப்பார் யாருமில்லை

வருஷங்கள் இருபத்தாறு கடந்துள்ள நிலையில்தானும்

இழப்பீடு எதுவும் இல்லை இறைவனே தஞ்சம் ஐயா

 

By

Related Post