நீறு பூத்த நெருப்பாக இருக்கும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தை எங்களையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர அவசரமாக உதவுமாறு மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர நிர்மாணத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்துடன் கிரேண்ட்பாஸ் பள்ளி விவகாரமும் இன்னும் தீர்க்கப்படாமல் இழுபறி நிலையிலேயெ இருந்து வருகின்றது. அதனையும் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் மேற் குறிப்பிட்ட அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
மாநகரங்களை அழகுபடுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். கொலன்னாவ, வெல்லம்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்களில் அழகு படுத்த நல்ல திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றீர்கள்,
அதே போன்று வடக்கின் புத்தளம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் சிறு நகரங்களை அமைத்துத்தருமாறு வேண்டுகின்றேன். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முசலி, மாந்தைப் பிரதேசங்களிலும் இரட்டைப்பெரிய குளங்களிலும் இன்னும் மக்கள் தகரக்கொட்டில்களிலே வாழ்கின்றனர். இவர்களுக்கும் உங்கள் அமைச்சு உதவ வேண்டும்.