முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை. அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். அத்துடன் ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முள்ளி பொத்தானை சிங்கள பாடசாலையொன்றில் நடந்த சாதாரண பரீட்சை எழுத சென்ற இரு முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப்புடன் பரீட்சை நிலையத்திற்கு வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. கிழக்கில் ஆசிரியர் நியமனம் பெற்றவர் ஹிஜாப், பர்தா அணியாமல் சாரியுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் நிலைப்பாடா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,
இந்த சம்பவத்தை, நாம் வன்மையாக கண்டிக்கிறோம். வரலாற்றிலிருந்து முஸ்லிம் பெண்கள் இந்த தடையை அணிந்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கவில்லை. இது அரசின் நிலைப்பாடாகும். இது தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தார்.