மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி.
புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு
புத்தளம் மாவட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம். எச் . எம் நவவியை நியமித்து, சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை மிகவும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியை அமைச்சர் பதவி விலகச் சொன்னதாகவும், அதற்கு நவவி மறுப்பு தெரிவித்ததாகவும் தேசிய நாளிதழ் ஒன்றில் ( 12.12.2016 ) முன்பக்கத்தில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், எவ்வித ஆதாரமுமற்றதுமாகும். இது வேண்டுமென்று,திட்டமிட்டு சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்பதை எமக்கு தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினர் மற்றும் புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் என்ற ரீதியில் இதை முற்றாக நான் மறுக்கிறேன். மேலும் தற்போது வெளிநாடு சென்றுள்ள நவவி எம் பியும் இந்த செய்தி தொடர்பில் தனது பலத்த ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார் என்பதையும் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நவவி எம்பி ஒரு கண்ணியமான அரசியல்வாதி. அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது நம்பிக்கை வைத்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார். அவர் கட்சியின் பிரதித்தலைவராகவும் செயற்படுகின்றார். இந்நிலையை விரும்பாத தீய சக்திகள் சில திட்டமிட்டு இவ்விருவருக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை சீர்குலைத்து அரசியல் ரீதியாக குளிர்காய முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் கனவு பலிக்காது என்பதை கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஆகவே இது போன்ற செய்திகளை பிரசுரிக்க முன்னர் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்ளும் ஊடக தார்மீக பொறுப்பை குறித்த பத்திரிகை முன்னெடுக்க வேண்டும் என்றும் தயவாய் வேண்டுகிறோம்.