Breaking
Mon. Nov 18th, 2024

அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை மட்டத்திலான குழு கடந்த 14 ஆம் திகதி கூடி போது 250,000 மெட்ரிக் தொன் அளவிலான புதிய அரிசியினை இறக்குமதி செய்து சந்தையில் இருக்கும் கேள்வியை நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

இந்தக் குழுவின் முடிவுக்கிணங்க 10,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் 20,000 மெட்ரிக் தொன் (வெள்ளை மற்றும் நாடு) நெல்லை நெற்சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (CWE) அமைச்சர் ரிஷாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் நெல்லை தனியார் ஆலைகள் மற்றும் அரச ஆலைகள் ஊடாக குற்றி அதனை அரிசியாக்கி லங்கா சதொச கிளைகள் மூலம் 78 ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தைப் பணித்துள்ளார்.

அமைச்சரின் பணிப்புரைக்கிணங்க இந்த செயற்பாடுகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இன்று தொடக்கம் (19) ஆரம்பித்துள்ளது.

எதிர் வருகின்ற நாட்களில் மேற் குறிப்பிட்ட அரிசி லங்கா சதொசவினூடாக பாவனைக்கு விடப்படுமெனவும் இதன் மூலம் புத்தாண்டு தினங்களில் அரிசியை தாராளமாக நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

By

Related Post