பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்று கூடி சமூகத்தின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிறிதொரு தினத்தில் சந்தித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரவுள்ளனர்.இது தொடர்பில் லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசியிடம் கருத்து வினவிய போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
விசேடமாக உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ள பாதிப்புகள், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் , புதிய தேர்தல் முறையும் அதனால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படவுள்ள சவால்கள், புனித குர்ஆன் மற்றும் இஸ்லாம் சில தரப்பினரால் அவமதிக்கப்படுகின்றமை போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன. சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பேதங்களின்றி ஒன்றுபடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேற்கொள்ளும் தீர்மானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்படும். இது பற்றி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.