கடந்தகால தனிப்பட்ட பேதங்களை மறந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப் பாவனையை குறைப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதிஅமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பால் பண்ணயாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்தகால குரோதங்களை மறந்து மாவட்டத்தில் காணப்படும் மதுபாவனையை குறைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்கு எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும். சமகால அரசியலை பொறுத்தவரை நாட்டில் இரண்டு கட்சியின் தலைவர்கள் ஒன்றிணைந்து வழிநடாத்துகின்ற நல்லாட்சி காலகட்டத்தில் சிறுபான்மை சமூகமான தமிழர்களும்,முஸ்லிம்களும் தனித்து செயற்படுவதன் மூலம் எதனையும் சாதித்து விட முடியாது. மதுபான பாவனையால் சமூகம் சீரழிகின்றது .வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால் மதுபாவனையால் ஏற்படுகின்ற செலவினை குறைக்க வேண்டும். இதனை குறைப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதியாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயலாற்றுவதற்கு நல்ல தருணம் கிடைத்திருக்கின்றது என நினைக்கின்றேன்.
எனவே இன,மத பேதங்கள் மற்றும் தனிப்பட்டகுரோதங்களை மறந்து மனித நேயத்துடன் எல்லோரும் கைகோர்த்து இப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும்.
இந்த விடயத்தில் மக்கள் பிரதி நிதிகள் ஒன்றினைந்து செயலாற்றுவது இன்றியமையாததாகும். கடந்தகால தனிபட்ட, அரசியல் குரோதங்களை மறந்து நமக்குள் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் எமது மாவட்டத்தை மதுபாவனை அற்ற ஒரு மாவட்டமாக உருவாக்க முன் வர வேண்டும்
எமக்குள் இருக்கின்ற அரசியல் கருத்துகளில் சரி, பிழை கண்டு முரண்பாடுகளுடன் செயற்படுவதை விட்டு விட்டு இந்த விடயத்தில் ஆக்க பூர்வமான பணியில் ஈடுபடவேண்டும்.
எனவே தற்போது காட்டப்பட்டுள்ள முனைப்பை இரட்டிப்பாக்கி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுகின்றேன்