திய அரசியலமைப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள சில விடயங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றமை முஸ்லிம் சமூகத்தை வெகுவாகப் பாதிக்குமெனவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்லாட்சிக்கு பங்களிப்பு செய்த முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் பிரதமரையும் வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களுக்குள்ளானது.
இதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே முஸ்லிம் சமூகம் ஆட்சி மாற்றத்துக்குப் பங்களிப்புச் செய்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக காரணமாக இருந்தது.
இந்நிலையில் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை பாதிப்பவையாக அமைந்துள்ளன. தொகுதிவாரி தேர்தல் முறை அமுல்படுத்தப்பட்டால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அது பெரிதும் பாதிக்கும்.
இதற்கு சிறுபான்மைக் கட்சிகளும் சிறுகட்சிகளும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. நாம் ஒன்றாக இணைந்து இதற்காகக் குரல்கொடுக்கிறோம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அரசாங்கம் மாற்று வழி தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோகணேசன் ஆகியோர் எமக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். இதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவுள்ளோம்.
மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளும் சிறு கட்சிகளும் பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.
வில்பத்து விவகாரம் இனவாதமாக நோக்கப்பட்டு வருகிறது.
இதற்கெதிராகவும் நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.