Breaking
Mon. Dec 23rd, 2024

-அமைச்சின் ஊடகப்பிரிவு –

வன்னி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், சிராய்வா, றயீஸ் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

அமைச்சர் றிஷாட் இங்கு கூறியதாவது, மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அரசியல் வாதிகள் இந்த இடத்தில் ஒன்று கூடி இருப்பது இந்த மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்த்தெடுப்பதில் அவர்கள் காட்டும் அதீத அக்கறையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நவீன தரமான விளையாட்டு மைதானம் ஒன்று அமைய வேண்டுமென அப்போது முடிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வேளை சில மாவட்டங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட போது வன்னிப் பிரதேசத்தில் முதன் முதலாக வவுனியாவுக்கு அந்த வகையிலான மைதானம் அமையப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் கட்டமாக மன்னாருக்கு அல்லது முல்லைத்தீவுக்கு விளையாட்டு மைதானம் வழங்கப்படுவதென்று முடிவு மேற்கொள்ளப்பட்ட போது இரண்டு மாவட்டத்துக்குமே இவ்வாறான நவீன விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டுமென நான் அப்போது வலியுறுத்தினேன். எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு மன்னாருக்கும், முல்லைத்தீவுக்கும் விளையாட்டு மைதானங்களை அமைப்பதென முடிவுசெய்யப்பட்டு திட்டத்தில் அவை உள்வாங்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்துக்கான நவீன விளையாட்டரங்கு ஏனைய மாவட்டங்களில் அமைந்திருப்பதைப் போன்று பிரதான பாதையை அண்டியும் நகரத்துக்கு அண்மித்ததாகவும் அமைய வேண்டுமென்ற கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டு பனங்கட்டிக் கொட்டு மற்றும் சில இடங்கள் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. எனினும் இந்த இடங்கள் எதுவுமே இதற்குப்பொருத்தமற்றது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதனால் விளையாட்டு மைதானத்தை எங்கே அமைப்பதென்ற வினா எழுந்து நின்றது. இந்த சந்தர்ப்பத்தில் பங்கு தந்தை ஜெயபாலன், பிரமுகர் மார்க், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நறுவிலிக்குளத்தில் இதனை அமைப்பதற்கான காணி வசதி உண்டென்று தெரிவித்ததனால். அவர்களின் ஆலோசனை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நறுவிக்குளமே பொருத்தமானதென அங்கீகரிக்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சும் தனது சாத்தியக் கூற்று அறிக்கையில் தனது இணக்கப்பாட்டை தெரிவித்தது. எனினும் பின்னர் சில தடைகள் ஏற்பட்டதனால் மன்னாரிலுள்ள பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்துச் சென்று விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து அதனை நிவர்த்தி செய்து முயற்சிகளை முன்னெடுத்தோம்.

மன்னார் மாவட்ட இளைஞர்கள் சிறந்த திறமைசாலிகள். விளையாட்டுத் துறையில் தேசிய ரீதியில் அவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். விரைவிலே மன்னார் மாவட்ட மாணவிகள் நால்வர் சரவதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் நாட்டுக்கு பயணமாக உள்ளார்கள் என்ற செய்தி எமக்கு மகிழ்ச்சி தருகின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட இளைஞர்களினதும், யுவதிகளினதும் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி அவர்களின் ஆற்றல்களை வளர்த்தெடுப்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த மைதானத்துடன் மட்டும் எமது முயற்சியை மட்டுப்படுத்திவிடாது மாந்தை, முசலி, மடு ஆகிய பிரதேசங்களிலும் நவீன மைதானங்களை அமைப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயா ஜயசேகரவும், பிரதி அமைச்சர் ஹரீஸ_ம் எமக்கு உதவ வேண்டும். அத்துடன் எமில் நகர் பள்ளிமுனை கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு அந்தப்பிரதேசங்களிலுள்ள மைதானங்களை செப்பனிட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது கடனாகும். பிரதி அமைச்சர் தனது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்து இந்த விழாவில் பங்கேற்றமைக்கும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவிய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் நான் நன்றிகளை எமது மக்கள் சார்பாக தெரிவிக்கின்றேன்.

8 7 4

By

Related Post