தம்புள்ளையின் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு கடந்த சில தினங்களாக விடுக்கப்படும் சவால்கள் தொடர்பில் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாமெனவும் அமைதி காக்கும் படியும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும் படியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசலை புதிய இடமொன்றுக்கு இடமாற்றிக்கொள்வதற்கான காணி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலை மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக நேற்றுக்காலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில்;
தம்புள்ளையில் யார் யாரெல்லாம் ஒரு இலட்சமல்ல, ஒருகோடி கையொப்பங்கள் சேகரித்தாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. முஸ்லிம்கள் இந்நாட்டவர்கள். அவர்களுக்கு இங்கே சகல உரிமைகளும் இருக்கின்றன. ஜம்இய்யதுல் உலமா சபை முஸ்லிம்களை இறைவனிடம் கையேந்துமாறே கேட்கிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் தலைவரிடம் கலந்துரையாடி பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத்தருவர். நாம் அவசரப்படக்கூடாது. நிதானம் இழக்கக் கூடாது. பிரச்சினைகளை நிதானமாக இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். நிச்சயம் எமது உரிமைகள் பாதுகாக்கப்படும்.
முஸ்லிம்கள் எவருக்கும் அநியாயம் செய்யவில்லை. எமது பள்ளிவாசல் இருக்கும் இடத்தை விட்டுக்கொடுத்து அதற்கு மாற்றீடாக போதியளவு காணியையே வேண்டி நிற்கின்றார்கள். இது நியாயமானதாகும் என்றார்.
கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம். கியாஸ் தலைமையில் நிர்வாக சபையின் பிரதிநிதிகளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவிசெயலாளர் மௌலவி தாஸிம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். (நன்றி விடிவெள்ளி)