சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது, அரசியலில் குளிர்காய நினைக்கும் இனவாத சிந்தனையுள்ள அரசியவாதிகள் அவர்களைக் குழப்பி சுயலாபம் தேட முயற்சிக்சிக்கிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் முசலியில் விதாதா வளநிலையத்தை இன்று காலை (2017.03.16) திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.
விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
அமைச்சர் றிஷாட் கூறியதாவது, சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்திருந்த இந்தப்பிரதேசம், மக்கள் வெளியேறிய பின்னர் காடு மண்டிக்கிடந்தது பாதைகள் அழிந்து, இருந்த இடம் தெரியாமல் பற்றைகளும் புதர்களும் வளர்ந்து புற்று மண்ணினால் மூடப்பட்டிருந்தது. முசலிப்பிரதேசத்தில் அப்போது இரண்டே இரண்டு பாதைகள்தான் பாவனையிலிருந்தன.
புலிகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது மத்தியிலும் இந்தப் பிரதேசத்தில் கட்டடங்ககளையும் பாடசாலைகளையும் பல்வேறு சவாலுக்கு மத்தியிலே கட்டி முடிப்பதற்கும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் இறைவன் உதவினான். தன்னந்தனியாக நின்று நாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எவருமே உதவி செய்யாது தற்போது குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி எம்மை விமர்சிப்பதிலேயே தமது காலத்தை கடத்துகின்றனர்.
அது சரியா இது சரியா? என மேடைகளிலே கூப்பாடு போட்டு கேவலங்கெட்ட அரசியலை நடத்தும் இவர்கள் இன ஐக்கியத்துக்கு வேட்டுவைக்கத் துடிக்கிறார்கள்.
விதாதா வளநிலையத்தை இந்தப் பிரதேசத்துக்கு கொண்டுவரவேண்டுமென்று கடந்த காலங்களில் நாங்கள் கொடுத்த அழுத்தங்களினாலும் கோரிக்கைகளினாலுமே அது இன்று சாத்தியமாயிற்று. அது போல முல்லலைத்தீவிலும் வவுனியாவிலும் இவ்வாறான வளநிலையங்களை அமைத்து இளைஞர் யுவதிகளின் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அமைச்சர் லக்மன் செனவிரட்ன எமக்கு உதவினார்.
விதாதா வளநிலையங்கள் கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்கள் ஏராளம் அதே போன்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் செனவிரட்ன சேவை மனப்பான்மை கொண்டவர்.
வில்பத்திலே முஸ்லிம்கள் காடழிப்பதாகவும் அதற்கு நானே துணை செய்து வருவதாகவும் செய்வதாகவும் இன்னும் சிங்கள சமூக வலைத்தளங்கள் மூலம் மோசமான பிரசாரங்கள் மேற்கொள்;ளப்படுகின்றன. இங்கு வரும் பெரும்பாண்மையின அமைச்சர்கள் உண்மை நிலையை அறிந்து ஊடகங்களுக்கும் சிங்கள சமூகத்துக்கும் அதனை எத்தி வைக்க வேண்டும் இந்த விடயத்தில் அமைச்சர்களான ராஜித, சம்பிக்க போன்றவர்கள் உண்மையான, நேர்மையான கருத்துக்களை தெரிவித்து வருவது எமக்கு சந்தோசம் தருகின்றது. கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக உழைத்த சிங்கள புத்திஜீவிகளும் சூழலியலாளர்கள் சிலரும் இங்கு வந்து நிலைமைகளை அறிந்து ஊடகங்களில் எங்களின் நிலைப்பாட்டை உரத்துப் பேசுகின்றனர்.
மக்கள் சேவகர்களாக இருக்கும் அரசாங்க ஊழியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவையாளர்கள் கிராமிய உத்தியோகத்தர்களுக்கு பாரிய சமூகப்பொறுப்பு உண்டு என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்த விரும்பகின்றேன். இவர்கள் அநியாயங்களுக்கு துணைபோகவும் கூடாது அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்யவும் கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
அமைச்சின் ஊடகப்பிரிவு