- ஊடகப்பிரிவு
வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஷ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீகக்காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளும், மேய்ச்சல் தரை நிலங்களும், குடியிருப்புக்காணிகளில் ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை பிழையானதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கையினாலேயே தங்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு முஸ்லிம்கள் முழுப்பங்களிப்பையும் நல்கினர்..
ஆட்சி மாற்றத்தை வேண்டி தங்களது உயிரையும் துச்சமென மதித்து எதையுமே பொருட்படுத்தாது முன்னின்று உழைத்த இந்த முஸ்லிம் சமூகத்தை இனவாதிகள் தொடர்ந்தும் கொடுமைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.
முஸ்லிம் சமூகத்தை காடழிக்கும் சமூகமாகக் காட்டி இனவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிழையான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த வர்த்தமானிப் பிரகடனத்தை நாம் பார்க்கின்றோம். அதுவும் தாங்கள் ரஷ்யாவில் இருக்கும் போது இந்த வர்த்தமானிப் பிரகடனம் வெளியிடப்பட்டமை எமக்குக் கவலை தருகின்றது.
வில்பத்து இயற்கை சரணாலயத்தில் ஓர் அங்குல நிலத்தையேனும் அபகரிக்காத முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி வரும் இனவாதிகளுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் தீனி கிடைத்துள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை புதிய வர்த்தமானி அறிவித்தலால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.