Breaking
Sat. Jan 11th, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் சுகநலத்திற்காகவும் மரணித்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
புனித நோன்பு மாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற அடிப்படைத்தேவையாகக் காணப்படும் பொருட்களை இன, மதம் பாராது பாதிக்கப்பட்ட அனைவருக்கம் வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். இந்த மாதத்தில் இவ்வுதவி இறைவனிடத்தில் நமக்குப் பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

இவ்வேளையில், புனித நோன்பு மாதத்தில் முஸ்லிம்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இனவெறியோடு செயற்பட்டோரிடமிருந்து எம்மைப் பாதுகாக்கவும், நாட்டில் இனநல்லுறவு ஏற்பட்டு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும், புரிந்துணர்வும் ஏற்படும் வகையிலும் இப்புனித நோன்பு நாளில் அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post