Breaking
Thu. Jan 16th, 2025

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முழுமை பெறாததற்கு முன்பதாக 4 வருட பூர்த்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. நாட்டில் இன்று அவ்வதிகாரம் மீறப்பட்டுள்ளது.

அவசரமாக அதாவது தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 வருடம் பூர்த்தியானதுடன் தேர்தலொன்றை ஜனாதிபதியால் அறிவிக்க முடியாது. இது அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். அத்தோடு தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளரே வெளியிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 31ஆவது ஷரத்தின் (2) இன் பிரகாரம் மக்களால் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதன் பின்னர் அப்பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட தகுதியானவர் அல்ல என்பது அரசியலமைப்பில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தல் மேற்கண்ட ஷரத்துக்கமையவே நடத்தப்பட்டது. எனவே அன்று தொடக்கம் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தெரிவு செய்யப்படுவதற்கும் தகுதியற்ற நபராகிறார்.

இலங்கையின் ‘வியாக்கியான சட்டமூலத்தின்” 6(3) இற்கமைய சட்டம் எதிர்காலத்திற்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அது கடந்த காலத்திற்கு ஏற்புடையதாகாது. எனவே அமுலில் உள்ள இச்சட்டத்தை தற்போது நீக்க முடியாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 9 பேரடங்கிய குழு மூலம் அரசியலமைப்பு தொடர்பாக வியாக்கியானத்தை வெளியிடும்போது வியாக்கியான கட்டளைச் சட்டத்திற்கமைய அது இடம்பெற வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்பாக 4 வருடம் பூர்த்தியானதும் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது.

அதுவும் அவ் அறிவிப்பை ஜனாதிபதியால் வெளியிட முடியாது. அதனை தேர்தல்கள் ஆணையாளரே வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post