எபோலா நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 600 கோடி) அளிப்பதாக மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏற்கெனவே அவர் 15 மில்லியன் (சுமார் ரூ. 90 கோடி) அளித்துள்ள நிலையில், கூடுதலாக உதவித் தொகையை அறிவித்துள்ளார்.
இப்போது அறிவித்துள்ள தொகையைத் தவிர, எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் விதத்தில், உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக, அவர் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.
“இந்த நோய் ஏற்படுத்தியுள்ள ஆபத்தான நிலையானது, நம் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது மேலும் பரவாமல் தடுக்கவும் சமூகத்தைப் பாதுகாக்கவும் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும். எபோலா என்பது வேறு எவருக்கோ ஏற்பட்ட பிரச்னை அல்ல. அது நம் அனைவரின் பிரச்னையாகும்.பெரிய நிறுவனமாக இருந்தாலும், பெரும் செல்வந்தராக இருந்தாலும், தொண்டு நிறுவனமாக இருந்தாலும், என்னைப் போன்ற தனி நபராக இருந்தாலும், அவரவருக்கு இயன்ற உதவியை உடனடியாக அளியுங்கள். ஒன்றுபட்டு, உடனடியாக நாம் முயற்சியெடுத்தால், இந்த நோய் பரவுவதை நாம் தடுக்க முடியும்’ என்று அந்த செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தை, பால் ஆலன், பில் கேட்ஸ் இணைந்து உருவாக்கினர். 2000-ஆம் ஆண்டுவரை, அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பால் ஆலன் இடம் பெற்றிருந்தார். எபோலா தடுப்பு நடவடிக்கைக்கு பில் கேட்ஸ்-மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சுமார் ரூ. 300 கோடி அளித்துள்ளது.