ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்க அமைச்சர்களும் அடக்கி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனாவும் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னர் இதே எச்சரிக்கையை சரத் பொன்சேகாவும் விடுத்திருந்தார். எனினும் பொதுபல சேனா இந்த எச்சரிக்கையை வித்தியாசமான முறையில் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் சிங்கள ஊடகம் ஒன்றில் பிரசுரமாகியுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர். எனவே பொது பல சேனாவின் ஆதரவை அவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று அடக்கி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் ஆட்டம் அளவுக்கதிகமாகி விட்டது. எனவே கட்டுப்பாடு அவசியம். அதே போன்று அமைச்சர்களும் அடக்கி வாசிப்பது நன்று.
இல்லாவிட்டால் நாங்கள் உத்தேசித்துள்ள தேசிய தலைவரை அரசியலுக்கு இப்போதே அழைத்து வர வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.