Breaking
Wed. Nov 20th, 2024

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்களில் நீங்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்நாட்டில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு பரிகாரம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் முனைப்போடு செயற்படுகின்றது. எங்களது தேவைகள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பிரதேசத்திலுள்ள எங்களை நாங்கள் ஆளவேண்டும் என்ற விரும்பமெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து கொண்டாலும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சில தவறுகளை விட்டுள்ளார்கள்.

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்களவர்களிடத்தில் மதத்தை இனத்தை பற்றி பேசுகின்ற சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேசுவதன் மூலம் தான் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்ல அபிப்பிராயத்தையும், நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் கொண்டு வரமுடியும்.

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நமக்கு மட்டும் பேசுவதை விடுத்து மற்றைய இனத்தவர்களுக்கு எங்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்ல வேண்டும். எங்களது கஷ்டம், உயிரிழப்பு, எதிர்பார்ப்புக்கள், மக்கள் அபிலாசைகள், நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்ற விடயங்களில் எவ்வளவு தூரம் பெரும்பான்மை சமூகத்தின் உள்ளங்களின் வென்றிருக்கின்றது என்பதில் எனக்கு சிறு சந்தேகம் உள்ளது.

இந்தப் பணியில் மூலம் தான் எமது எதிர்பார்ப்புக்களை வென்றெடுக்க முடியும். இல்லையென்றால் சதி செய்து விடுவதற்கு தயாராக இருப்பார்கள். தமிழ் தரப்பாக, முஸ்லிம் தரப்பாக, சிங்கள தரப்பாக இருந்தாலும் நல்ல விடயம் நடக்கப் போகின்றது என்கின்ற பொழுது சதி செய்யும் ஒரு அணியினர் வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவார்கள்.

அவர்கள் அப்படி செயற்படுகின்ற பொழுது எமது எதிர்பார்புக்களில் பின்னடைவுகள் அதிகம் நகர்ந்துவிடும். இதுதான் சிறுபான்மை சமூகத்திற்கு நாட்டில் ஏற்பட்டுப் போயுள்ள விடயம்.

பெரும்பான்மையின மக்கள், அரசியல் தலைமைகள் என்ன சொன்னாலும், ஏசினாலும், எப்படி எங்களை கொச்சைப்படுத்த நினைத்தாலும் அவர்களோடு அரவணைத்து செல்லுகின்ற வேலைத்திட்டத்தை கடந்த காலங்களில் செய்யாத காரணத்தினால் சானேர முளம் சருக்குகின்ற விடயமாக காணப்படுகின்றது.

இந்நாட்டினுள்ள மூன்று இனமும்; ஒற்றுமைப்பட்டவர்கள், நாட்டினுடைய மக்கள் என்கின்ற நிலவரத்திற்கு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியிலே வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும். எமது கைக்கு கிடைப்பது போதாது என்று சொல்லிக் கொண்டு அடுத்த கையை பின்புறமே வைத்துக் கொண்டு நகர்த்திச் செல்வோமாக இருந்தால் சானேர முளம் சறுக்குகின்ற நிலைமைக்கு செல்வோம் என்றால் மீண்டும் தோற்கப் போவது சிறுபான்மை சமூகமாகும்.

பெரும்பான்மை சமூகங்கள் விரும்பாத எந்த தீர்வும் எங்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த போவதில்லை. அந்தவகையில் பெரும்பான்மை சமூகங்களின் உள்ளங்களை வெல்லுகின்ற வேலைத் திட்டங்களை செய்வதுடன், அவர்களை உசுப்பேத்துகின்ற, முறுக்கேத்துகின்ற வசனங்களை பேசுவதில் இருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வுக்கு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் எஸ்.அனுருந்ன, நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பிரதி தலைவர் பாலித்த பண்டார, பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.வீரசிங்கம், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Post