Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

 

இங்கு உரையாற்றி அமைச்சர் கூறியதாவது,

“இலங்கை வணிக சங்கமும், நெடா நிறுவனமும் இணைந்து நடாத்தும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள வெற்றியாளர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையின் நடுத்தர சிறு முயற்சியாளர்கள் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விவசாயம், கால்நடை, மீன்பிடி, உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மருத்துவ, விருந்தோம்பல் வசதிகளை மேம்படுத்தும் இந்தத் துறையில் ஈடுபடுவோருக்கு எமது அமைச்சு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றது.

தனியார் வைத்தியசாலைகள் வெறுமனே பணம் உழைக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல. சேவை நோக்குடன் மனிதாபிமான ரீதியில் இயங்கி வருவனவாகும். மேலும், இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகளின் இயக்குனரான, ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியை மேல் மாகாணத்துக்கானா தொழில் முயற்சியாளர்களுக்குரிய  சிறந்த விருதைப் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உத்வேகம் அளிக்க இவ்வாறான விருது வழங்குவது உதவுமென நான் கருதுகின்றேன்” என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஒமர் காமில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

-ஊடகப்பிரிவு-

Related Post