இவ்வாண்டின் முதல் அரைப்பகுதியில் மட்டும் சிறிலங்கா ரெலிகொம் (SLT) 1324 மில்லியன் ரூபா இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது என பாராளுமன்றத்தில் நேற்று (28) சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இத்தரவுகள் நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தரவுகளின் படி சிறிலங்கா ரெலிகொம் 4000 மில்லியன் ரூபாவினை வருடாந்த இலாபமாக கொண்டுள்ளது. சிறிலங்கா ரெலிகொம் 7843 மில்லியன் ரூபாவினை குறுகிய கால கடன், வங்கி மிகைப்பற்றுகள், நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் வசதிகளாக இன்று கொண்டுள்ளது.
இனிமேல் எதிர்வரும் ஆண்டுகளான 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சிறிலங்கா ரெலிகொம் தமது இலாப இலக்காக 4200 மற்றும் 4425 இனை திட்டமிட்டுள்ளனர். இதுவே கடந்த 2013 ஆம் ஆண்டில் ரெலிகொம்மின் இலாபம் 3635 மில்லியன் ரூபாவாகவும், 2012 ஆம் ஆண்டில் 3246 மில்லியன் ரூபாவாகவும் அமைந்தது.
அத்துடன் ரெலிகொம் தொழிலாளர்களின் வருமானம் செலவுகள் பற்றியும் சமர்ப்பிக்கப்பட்டது.